×

அரபிக்கடலில் ‘டவ்-தே’ புயல் எதிரொலி: தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயலை எதிர்கொள்ள  தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 18ம் தேதி குஜராத்தில் கரையை கடக்க உள்ளது. புயல் காரணமாக கேரளம், கர்நாடகம், தமிழகம், கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதேபோல், தமிழகத்தில் புயல் காரணமாக கோவை, தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று, அரபிக்கடலில் உருவாகியுள்ள ‘டவ்-தே’ புயல் சின்னம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, நிதித் துறை செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், புயல் சின்னம் குறித்த தற்போதைய நிலவரத்தையும், மழை பெய்யவிருக்கிற சாத்தியக்கூறுகளையும்  எடுத்துக் கூறினார்.  இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரபிக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தைத் தொடர்ந்து கன மழை முதல் மிக கன மழை ஏற்படக்கூடிய மாவட்டங்களில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  மேலும், ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் மே 14ம் தேதி காலைக்குள் கரைக்கு திரும்புமாறு ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.  ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள 244 ஆழ்கடல் மீன்பிடி படகுகளுள்,  162 மீன்பிடிப் படகுகள் தற்போது கரைக்குத் திரும்பியுள்ள நிலையில், எஞ்சிய படகுகளும் கரை திரும்ப உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதேபோல், நிலச்சரிவு ஏற்படக்கூடிய மலை மாவட்டங்களில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவையான உபகரணங்களைத் தயார் நிலையில் வைக்க வேண்டும். மழையால் பாதிக்கப்படுகிறவர்களை முகாம்களில் தங்க வைக்கும்போது, கொரோனா எச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முழு வீச்சில் வருவாய்த் துறையினர் கண்காணிப்புப் பணிகளைச் செய்ய வேண்டும். அணைகளின் நீர்மட்டங்களைக் கண்காணிக்க வேண்டும். தேசிய பேரிடர் மீட்புப் படையின் நான்கு குழுக்களும் மதுரை (2), கோயம்புத்தூர் (1) மற்றும் நீலகிரி (1) மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் குழுக்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு ஏற்படக்கூடிய மாவட்டங்களில் அக்குழுக்களைக் கொண்டு உடனடியாக நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். …

The post அரபிக்கடலில் ‘டவ்-தே’ புயல் எதிரொலி: தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Stalin ,Dov ,Arabian Sea ,Dove-the ,PM ,Dinakaraan ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...