×

ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 40 தமிழக மீனவர்களை கச்சத்தீவு அருகே சிறைபிடித்தது இலங்கை படை

ராமேஸ்வரம்: தமிழக கடற்கரை பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அவ்வப்போது தாக்குதல் நடத்துவதுடன் அவர்களை சிறை பிடிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளது. ஆண்டாண்டு நடைபெற்று வரும் இந்த பிரச்சனைக்கு இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை. இந்த நிலையில் மீண்டும் 40 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை நள்ளிரவு முதல் சிறைபிடித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், தங்கச்சி மடம், பாம்பன் ஆகிய பகுதிகளில் இருந்து நேற்று காலை சுமார் 300 படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். நள்ளிரவு நேரத்தில் அவர்கள் கச்சத்தீவு அருகே இலங்கை-இந்திய கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக இலங்கை கடற்படையினர் கப்பலில் ரோந்து வந்தனர். திடீரென இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர். இதனால் பயந்து போன மீனவர்கள் உடனடியாக கரையை நோக்கி விரைந்துள்ளனர். மேலும் 2 படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்து அதில் இருந்த மரியசிங்கம், ராபின்சன், பேசியர், பிராங்கிளின், சுப்ரீஸ், சோனைமுத்து, சக்தி, விஜயன், ரோசாலிஸ், குமார், கெரோனிஸ், மகேசுவரன், ஜான், கதிர், சிவா, அந்தோணி புளூட்டஸ், ராயப்பூ, அஜிரோ உள்பட 20 தமிழக மீனவர்களை சிறை பிடித்துள்ளனர். இதே போல் காரைக்கால், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்து கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 20 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். அவர்களிடம் இருந்து 5 படகுகளை பறிமுதல் செய்தனர்.

மற்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரபி விரட்டி அடித்தனர். பின்னர் 40 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து இலங்கை மன்னார் கடற்கரை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறது. எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 40 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் படகுகளை தாக்கி இலங்கை கடற்படை மூழ்கடித்தது. இதில் ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் உயிரிழந்தனர். இதை கண்டித்து மீனவர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர் மற்றும் அரசியல் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில் இலங்கை கடற்படை மீண்டும் தமிழக மீனவர்களை சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா மீது கோபம் ஏற்படும்போதெல்லாம் தமிழக மீனவர்களை தாக்குவதும், சிறைப்பிடிப்பதும் இலங்கையின் வாடிக்கையான செயலாகவே இருந்து வருகிறது. இப்போதும் அதே போன்று கோபத்தில் இலங்கை இந்த அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 2009-ல் நடந்த இலங்கை இறுதிக்கட்ட போரின்போது சிங்கள ராணுவம் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்து சர்வதேச போர் விதிமுறைகளை மீறி கொடூரமாக நடந்து கொண்டது.
எனவே ஐ.நா. மனித உரிமை கமி‌ஷனில் இலங்கை மீது போர் குற்ற விசாரணை நடத்த இங்கிலாந்து உள்ளிட்ட 6 நாடுகள் தீர்மானங்கள் கொண்டு வந்தன. இந்த தீர்மானத்தின் மீது நேற்று முன்தினம் ஓட்டெடுப்பு நடந்து முடிந்தது. தங்களுக்கு சாதகமாக ஓட்டுப்போட வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிடம் இலங்கை வற்புறுத்தியது.

ஆனால் இந்தியா இலங்கைக்கு சாதகமாக நடந்து கொள்ள கூடாது என தமிழகத்தில் இருந்து அனைத்து மக்களும், அரசியல் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மத்திய அரசு யாருக்கும் சாதகமாக நடந்து கொள்ளாமல் ஓட்டெடுப்பை புறக்கணித்தது. இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் அவையில் நிறைவேறியது. இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பிரிட்டன், கனடா உள்ளிட்ட 6 நாடுகள் இணைந்து தீர்மானம் கொண்டு வந்தன. தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகள், எதிராக 11 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உள்பட 14 நாடுகள் தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் புறக்கணித்துவிட்டன. இதனால் இலங்கை அரசு மீது ஐ.நா. மனித உரிமைகள் குழு போர் குட நடவடிக்கை விசாரணை நடத்த உள்ளது. இதனால் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளது. இது சம்பந்தமாக மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Sri Lanka Force ,Rameswara ,Kachatrieva , Sri Lankan Army captures 40 Tamil Nadu fishermen from Rameswaram near Kachchativu
× RELATED மீனவர்களுக்கு சிறை.. கச்சத்தீவு...