×

ஐஸ்லாந்து தலைநகர் ரேக்யூவீக்கில் அருகே எரிமலை வெடித்து சிதறியது: 'ட்ரோன்'வீடியோ வைரல்

ஐஸ்லாந்து: ஐஸ்லாந்து தலைநகர் ரேக்யூவீக்கில் அருகே அமைந்துள்ள எரிமலை வெடித்து சிதறி நெருப்பு லாவா குழம்பு ஆறு பாய்ந்து வருகிறது. அந்த நாட்டை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆளில்லா விமானம் ட்ரோன் மூலம் எரிமலையின் சீற்றத்தை மிக அருகில் படம் பிடித்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வடக்கு அட்லான்டிக் கடலில் ஐஸ்லாந்து தீவாகிய நாடு அமைந்துள்ளது. அங்கு சுமார் 4 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். எதிரெதிர் திசையில் மோதிக் கொள்ளும் இரு புவி தட்டுகளுக்கு இடையில் ஐஸ்லாந்து அமைந்திருப்பதால் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. எனவே கடந்த 3 வாரங்களில் மட்டும் 40,000 நிலநடுக்கங்கள் அந்நாட்டில் நிகழ்ந்துள்ளன.

ஐஸ்லாந்தில் 30-க்கும் மேற்பட்ட எரிமலைகள் இருக்கின்றன. அவற்றில் சில அவ்வப்போது வெடித்து சிதறுகின்றன. தலைநகர் ரேக்யூவிக்கில் இருந்து 40 கி.மீ. தொலைவில் பேக்ரதால்ஸ்பயாட்ல் என்ற எரிமலை உள்ளது. இந்த எரிமலை சுமார் 800ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 19-ம் தேதி இரவு வெடித்துச் சிதறியது. இது சாம்பலையும் புகையையும் அதிகமாக உமிழவில்லை. எனினும் எரிமலையின் லாவா குழம்பு ஆறாக பாய்கிறது. இதனால் சுமார் ஒரு சதுர கி.மீ. தொலைவுக்கு லாவா குழம்பு பரவி காணப்படுகிறது. அண்மையில் எரிமலையின் சீற்றம் ஹெலிகாப்டர் மூலம் வீடியோ காணொளி எடுக்கப்பட்டது. ஆனால் கடும் வெப்பம் காரணமாக எரிமலை அருகே செல்ல முடியவில்லை.

எனினும் ஐஸ்லாந்து உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுச்சூழல் புகைப்பட கலைஞர்கள் சிறிய ரக ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் எரிமலை சீற்றத்தை வீடியோவில் பதிவு செய்து வருகின்றனர். அவர்களில் ஐஸ்லாந்தை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஜார்ன் ஸ்டென்ஸ்பெக் (49), எரிமலைக்கு மிக அருகே ட்ரோனை பறக்க செய்து இயற்கையின் சீற்றத்தை தத்ரூபமாக வீடியோ எடுத்துள்ளார். ஜார்ன் ஸ்டென்ஸ்பெக் ட்ரோன் எரிமலையின் வாய் பகுதிக்கு மேலே பறந்து லாவா குழம்பு கொந்தளித்து சிதறி வடிந்தோடுவதை வீடியோவாக பதிவு செய்திருக்கிறது. மெய்சிலிர்க்கும் அவரது ட்ரோன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து புகைப்பட கலைஞர் ஜார்ன் ஸ்டென்ஸ்பெக் கூறுகையில், நவீன எப்பிவி மாடல் ட்ரோன் மூலம் எரிமலை சீற்றத்தை வீடியோவாக பதிவு செய்தேன். எனது ட்ரோனின் விலை ரூ.2 லட்சமாகும் ஆகும். எரிமலைக்கு மிக அருகே ட்ரோனை பறக்க செய்தால் வெப்பத்தில் எரிந்துவிடும் ஆபத்து உள்ளது. இதன் காரணமாக சாமர்த்தியமாக ட்ரோனை பறக்க செய்து வீடியோ காட்சிகளை பதிவு செய்தேன். பெரும்பாலான மக்கள் ட்ரோனுக்கு என்ன ஆனது என்றே கேள்வி எழுப்பி வருகின்றனர். ட்ரோனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, நல்ல நிலையில் இருக்கிறது என்று ஜார்ன் ஸ்டென்ஸ்பெக் தெரிவித்துள்ளார்.


Tags : Reykjavk ,Iceland , Volcano erupts near Icelandic capital Reykjavik: 'drone' video goes viral
× RELATED ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை …...