×

தேமுதிக பொருளாளரும் விருத்தாசலம் தொகுதி வேட்பாளருமான பிரேமலதாவுக்கு கொரோனா தொற்று இல்லை: கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி தகவல்

கடலூர்: தேமுதிக பொருளாளரும் விருத்தாசலம் தொகுதி வேட்பாளருமான பிரேமலதாவுக்கு கொரோனா தொற்று இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. பிரேமலதாவுக்கு கொரோனா இல்லை என கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி செந்தில் தகவல் அளித்துள்ளார். எல்.கே.சுதீஷ், மனைவி பூர்ணிமாவிற்கு கொரோனா இருப்பதால் பிரேமலதாவிற்கு பரிசோதனை நடந்தது. விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். இவர் கடந்த 18-ந்தேதி தே.மு.தி.க. இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீசுடன் விருத்தாசலம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு விருத்தாசலத்தில் தங்கி தனது தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுதீஷ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையறிந்த கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் வேட்புமனு தாக்கலின்போது சுதீசுடன் இருந்த பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தொகுதி பொறுப்பாளர் ராஜ் மற்றும் தேர்தல் அதிகாரிகள் அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.இதன் காரணமாக சுகாதாரத்துறை குழுவினர் நேற்று விருத்தாசலம் தொகுதிக்குட்பட்ட செராமிக் தொழிற்பேட்டை பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பிரேமலதா விஜயகாந்திடம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என கூறினார்கள். அதற்கு பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் முடிந்ததும் தான் தங்கியுள்ள அறைக்கு வாருங்கள் அங்கே பரிசோதனை எடுத்துக் கொள்ளலாம் என கூறினார். சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும் என கூறினார்கள்.

இதனால் ஆத்திரமடைந்த தே.மு.தி.க. கட்சி தொண்டர்கள் தற்போது பிரேமலதா விஜயகாந்த் பிரசாரத்தில் உள்ளதால் பிறகு பரிசோதனை செய்து கொள்ளலாம் என கூறி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர். தேர்தல் பிரசாரத்தை முடித்த பிரேமலதா விஜயகாந்த் தான் தங்கியுள்ள அறைக்கு சென்றதும் சுகாதாரத்துறையினருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று மதியம் 2.30 மணியளவில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவருடன் இருந்த விருத்தாசலம் தொகுதி பொறுப்பாளர்கள் ராஜ், ஜானகிராமன் மற்றும் கார் டிரைவர் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். இந்நிலையில் இன்று காலை வந்த பரிசோதனை முடிவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனா தொற்று இல்லை என கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி செந்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : Premalada ,Vṛthasalam ,Kadalur ,department , Temujin treasurer and Vriddhachalam constituency candidate Premalatha has no corona infection: Cuddalore District Health Officer
× RELATED அனல் பறக்கும் தமிழக தேர்தல் களம்: நாளை...