×

பழநியை திருப்பதிபோல் மாற்றுவோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

பழநி: பழநியை திருப்பதிபோல மாற்றுவோம் என பழநியில் நடந்த பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம், பழநி தொகுதி அதிமுக வேட்பாளர் ரவி மனோகரனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். பழநி பஸ் நிலையம் அருகில் திறந்தவேனில் நின்றபடி எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: நாடும், நாட்டு மக்களும் நலம் பெறவே அதிமுக தலைமையிலான கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் வழங்குவதாகக் கூறிய ஜெயலலிதாவின் வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்பட்டு விட்டது. பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள், சீருடை, காலணி, புத்தகங்கள் போன்ற அனைத்தும் வழங்கியவர் ஜெயலலிதா.

இந்தியாவிலேயே விலையில்லா லேப்டாப் வழங்கிய மாநிலம் தமிழகம் மட்டுமே. எனவே, தமிழகத்தில் ஏழைக்குழந்தைகளின் கல்வி சிறப்பாக உள்ளது. கல்விக்கு முக்கியத்துவம் தருகிறது அதிமுக அரசு. பழநியை திருப்பதியைபோல் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தைப்பூசத்திற்கு பொது விடுமுறை அறிவித்தது அதிமுக அரசுதான். அரிசி அட்டைதாரர்களுக்கு ஆண்டிற்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். நிலமும், வீடில்லாத ஏழைகளுக்கு வீடும் கட்டித்தரப்படும். உயர்கல்விக்கு உதவித்தொகை வழங்கப்படும். பழநியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூச்சலிட்ட இளைஞர்கள்
பழநியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்தபோது, தேவேந்திர குல வேளாளர் அறிவிப்பு தொடர்பாக பேசுமாறு இளைஞர்கள் சிலர் கூச்சலிட்டனர். அவர்களை அமைதியாக இருக்குமாறும், பிறகு பேசுவதாகவும் முதல்வர் கூறினார். இதனைத்தொடர்ந்து போலீசார் கூச்சலிட்ட வாலிபர்கள் இருந்த இடத்திற்கு சென்று அமைதிப்படுத்தினர். ஆனால் கடைசி வரை முதல்வர் எடப்பாடி தேவேந்திரகுல வேளாளர் அறிவிப்பு பற்றி பேசவில்லை.



Tags : Edipati Palanisami , We will change Palani like Tirupati: Chief Minister Edappadi Palanisamy's speech
× RELATED அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த...