உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணாவை நியமிக்க பரிந்துரை: மத்திய அரசுக்கு எஸ்.ஏ.பாப்டே கடிதம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி என்.வி.ரமணாவை நியமிக்கும்படி, மத்திய அரசுக்கு தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே பரிந்துரை செய்துள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவின் பதவிக் காலம் வரும் ஏப்ரல் 23ம் தேதியோடு முடிகிறது. இதனால், புதிய தலைமை நீதிபதியை நியமிக்கும் பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இது தொடர்பாக, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்கு கடிதம் எழுதி அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என பரிந்துரைக்குமாறு கேட்டிருந்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனத்தில் சில மரபுகள் பின்பற்றப்படுகின்றன. இதன்படி, ஓய்வு பெறும் தலைமை நீதிபதி, தனக்கு அடுத்ததாக அந்தப் பதவியில் யாரை நியமிக்கலாம் என்று மத்திய அரசுக்குப் பரிந்துரை

செய்வார். அதன்படி தற்போது தலைமை நீதிபதியாக உள்ள எஸ்.ஏ.பாப்டே, தனக்கடுத்து மூத்த அந்தஸ்தில் உள்ள நீதிபதி என்.வி.ரமணாவை பரிந்துரைத்து செய்துள்ளார். இது தொடர்பாக தனது பரிந்துரை கடிதத்தை மத்திய அரசுக்கும், நீதிபதி ரமணாவுக்கும் அவர் அனுப்பி வைத்துள்ளார். இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்கும் பட்சத்தில் நீதிபதி ரமணா புதிய தலைமை நீதிபதியாக வரும் ஏப்ரல் 24ம் தேதி பொறுப்பேற்பார். அவரது பதவிக் காலம் 2022ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி வரையாக இருக்கும். 1957, ஆகஸ் 27ம் தேதி ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டம், பொன்னவரம் கிராமத்தில் பிறந்தவரான நீதிபதி ரமணா, ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் 2000ம் ஆண்டு ஜூனில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன்பின், டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.

ஜெகன் மோகன் புகார் தள்ளுபடி

‘ஆந்திர அரசுக்கு எதிராக நீதிமன்ற விவகாரங்களில் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி என்.வி.ரமணா தலையிடுகிறார். தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு சாதகமாக அவர் செயல்படுகிறார்,’ என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடந்தாண்டு அக்டோபர் 10ம் தேதி ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக ரமணாவை நியமிக்கும்படி நேற்று பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், அவர் மீது ஜெகன் கூறிய குற்றச்சாட்டை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

Related Stories:

>