×

தேர்தல் பிரசாரத்தின்போது மோதல் வேளச்சேரி அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் மீது வழக்கு பதிவு: திருவான்மியூர் போலீஸ் நடவடிக்கை

சென்னை: வேளச்சேரி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தின்போது அதிமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 2 வேட்பாளர்கள் மீதும் திருவான்மியூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை வேளச்சேரி சட்டப்பேரவை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அசன் மவுலானா கடந்த 21ம் தேதி திருவான்மியூர் கடற்கரை அருகே பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அசன் மவுலானா வந்த கார், முன்னால் சென்ற பைக் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் பைக்கில் வந்த தம்பதி கீழே விழுந்துள்ளனர். உடனே காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா காரில் இருந்து கீழே இறங்கி தம்பதியை மீட்டு ஆறுதல் கூறினார்.

அப்போது அந்த வழியாக அதிமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் வந்துள்ளார். காயமடைந்த தம்பதிக்கு ஆறுதல் கூறிய காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானாவை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இதை பார்த்த காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் வீடியோ எடுப்பதை தடுக்க முயன்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அதிமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்த வெங்கடேசன் சம்பவம் குறித்து அதிமுக வேட்பாளர் அசோக்கிற்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்படி அதிமுக வேட்பாளர் அசோக் தனது ஆதரவாளர்களுடன் சம்பவ இடத்துக்கு வந்துள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காங்கிரஸ் வேட்பானர் அசன் மவுலானா திருவான்மியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அவரது புகாரின்படி போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பின்னர் தாக்கதல் தொடர்பாக காங்கிரஸ் வேட்பாளர் சார்பில் நேற்று முன்தினம் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தல் ஆணைய உத்தரவுப்படி திருவான்மியூர் போலீசார் மோதலில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் அசோக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது ஐபிசி 323, 324 உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரசாரத்தின் போது ஏற்பட்ட மோதலில் அதிமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Vilachcheri ,Thiruvanamur , Clashes during election campaign Velachery AIADMK, case registered against Congress candidates: Thiruvanmiyur police action
× RELATED சென்னை திருவான்மியூர் கடற்கரை சாலையில் வேன் மோதி இளைஞர் பலி