×

அரியலூர் அருகே கட்டிய 3 மாதத்தில் உடைந்த தடுப்பணையில் மூழ்கி 3 குழந்தைகள் பரிதாப பலி: ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்

அரியலூர்: கட்டிய 3 மாதத்தில் உடைந்த ஓடை தடுப்பணையில் தேங்கி கிடந்த நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அரியலூர் மாவட்டம், செந்துறை மணப்பத்தூர் கிராமத்தில் சின்ன ஓடையின் குறுக்கே கடந்த 6 மாதங்களுக்கு முன் ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.15.92 லட்சத்தில் தடுப்பணை கட்டும் பணிகள் தொடங்கி அவசர கதியில் கட்டப்பட்டது. இதனால் தடுப்பணை பலமின்றி இருந்ததோடு அதன் பக்கத்திலும் பலமான கரை அமைக்கப்படாமல் பெயரளவில் கட்டியுள்ளனர். இந்நிலையில் வடகிழக்கு பருவமழையின்போது தடுப்பணையின் ஒரு பகுதியில் நீர் கசிவு ஏற்பட்டு மண்ணரித்து சென்றது. இதனால் தடுப்பணை சுவர் மேலும் பலமிழந்தது. தடுப்பணையில் ஒரு பகுதியில் அதிகளவு ஆழத்தில் மணல் நீரில் அடித்துச் செல்லப்பட்டு பெரும் பள்ளம் ஏற்பட்டது.

இந்த பள்ளத்தில் தரம் இல்லாமல் கட்டப்பட்ட தடுப்பணை சுவரும் இடிந்து விழுந்தது. இதனால் அங்கு 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கடந்த 3 மாதத்துக்கு முன் அப்பகுதி மக்கள், இடிந்த தடுப்பணையை சீரமைக்க வேண்டும், இரு பக்கமும் கரையை பலப்படுத்த வேண்டும் என அதிகாரிகளை நேரில் சந்தித்து  கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் மணப்பத்தூர் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர்கள் கூலித்தொழிலாளிகள் சுதாகர், ஜெயசீலன். அண்ணன் தம்பிகள். இதில், சுதாகர்-மேகலா தம்பதிக்கு சுடர்விழி(8) என்ற மகளும், ஜெயசீலன்-அமுலு தம்பதிக்கு சுருதி(10) என்ற மகளும், ரோகித்(7) என்ற மகனும் இருந்தனர். குழுமூர் தனியார் பள்ளியில் சுருதி 4ம் வகுப்பும், மணப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுடர்விழி மற்றும் ரோகித் 2ம் வகுப்பும் படித்து வந்தனர். கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் வீட்டில் இருந்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று 3 பேரும் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் குழந்தைகளை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. வீட்டின் அருகே சின்ன ஓடைக்கு சென்று பார்த்த போது ஓடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் சேதமடைந்த பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரில் ஒரு குழந்தை உடல் மிதந்தது. இதனையடுத்து அப்பகுதி இளைஞர்கள் உள்ளே இறங்கி தேடியபோது இடிந்து விழுந்த சுவருக்கு அடியில் மேலும் இரு குழந்தைகளை சடலமாக மீட்டனர். தகவலறிந்த குவாகம் போலீசார் 3 பேரின் உடல்களை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இடிந்த தடுப்பணையை சீரமைக்காததே காரணம்
அப்பகுதி இளைஞர்கள் கூறுகையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகளை இழந்துள்ளோம். இதற்கு தரம் இல்லாமல் கட்டப்பட்ட தடுப்பணையும், இடிந்த பகுதியை சீரமைக்காமல் கிடப்பில் போடப்பட்டதுமே காரணம். குழந்தைகளை இழந்த குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். தடுப்பணையினை சீரமைக்க வேண்டும் என ஆவேசமாக தெரிவித்தனர்

Tags : Ariyalur , Ariyalur, 3 months, in custody, 3 children, killed
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...