ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார் கோவை மாவட்ட கலெக்டர் போலீஸ் கமிஷனர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி

கோவை: கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் ஆளும்கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் ஈடுபட்டு வந்தனர். இது குறித்து திமுக சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியலுடன் புகார் அளித்தனர். அந்த புகாரை தொடர்ந்து கடந்த வாரம் இந்திய தேர்தல் ஆணையம் தெற்கு மண்டல் ஐஜியாக செயல்பட்டு வந்த முருகனை தேர்தல் பணியில் ஈடுபட தடை விதித்தும், தெற்கு மண்டல ஐஜி பதவியில் இருந்து விடுவித்தும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து உடனடியாக ஐஜி முருகன் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு தேர்தல் பணியில்லாத பதவிக்கு மாற்றப்பட்டார்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு ேதர்தல் பணியாற்றுவதாக எழுந்த புகார் அடிப்படையில் கோவை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பியாக இருந்த அனிதா மாற்றப்பட்டார். அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள புதிய பதவி மீதும் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. இந்தநிலையில், கோவை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராஜாமணி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் ஆகியோரை மாற்றி தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது. மாற்றப்பட்ட ராஜாமணிக்கு வேறு பணியிடம் எதுவும் ஒதுக்கப்படவில்லை. கோவை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்த இவர், எஸ்.பி. வேலுமணி உள்பட ஆளும்கட்சிக்கு ஆதரவான அலுவலர்களை, தேர்தல்  பணிக்கு ஒதுக்கீடு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பேரில், இவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரணும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக செயல்பட்டார் என திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் புகார் தெரிவித்தன. இவர், கடந்த 2018 நவம்பர் முதல் கோவையில் பணியாற்றி வந்தார். தேர்தலுக்காக ஆளும் கட்சிக்கு ஆதரவாக தனக்கு வேண்டிய போலீசாரை கோவையில் வைத்துக்கொண்டு இதர அதிகாரிகளை பணியிடம் மாற்றியதாக இவர் மீது அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், கமிஷனர் சுமித் சரண் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கும் மாற்று பணியிடம் ஒதுக்கப்படவில்லை. இதனிடையே, தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு துறை இயக்குநராக பணியாற்றி வந்த நாகராஜன், கோவை மாவட்ட புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய போலீஸ் கமிஷனராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி நடவடிக்கை, கோவை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>