×

கருமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

கம்பம்: பங்குனி திருவிழாவை முன்னிட்டு, கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கருமாரியம்மன் கோயிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் உள்ளது ஸ்ரீ கருமாரியம்மன் கோயில். இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடப்பது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா ேநாய் தொற்று காரணமாக விழா நடக்கவில்லை. இந்நிலையில் இந்தாண்டு பங்குனி திருவிழா கொடியேற்றம் கடந்த வாரம் நடந்தது. 3 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதையொட்டி முல்லைப் பெரியாற்றில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். இதனைத்தொடர்ந்து பக்தர்கள் பூக்குழி இறங்கி அம்மனுக்கு நேர்த்திகடனை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி பக்தர்கள் பக்தி பரவசம் பொங்க ஓம்சக்தி பராசக்தி என முழக்கமிட்டனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன. விழாவில் கம்பம், நாரயாணத்தேன்பட்டி, ராயப்பன்பட்டி, அணைப்பட்டி, சுருளிப்பட்டி, கோகிலாபுரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். ராயப்பன்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Banni festival ,Karumaryamman Temple , Panguni Festival at Karumariamman Temple: Devotees Nerthikkadan
× RELATED ஆலடிப்பட்டி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்