மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல்போட்டி: தமிழகத்திற்கு 3வது இடம்

தேனி: பெங்களூருவில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் தமிழக அணி 3 வது இடத்தை பெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான நீச்சல் போட்டிகள் பெங்களூருவில் கடந்த 20, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடந்தது. இதில்  தமிழ்நாடு உள்பட 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து நீச்சல்வீரர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 34 பேர் கலந்து கொண்டனர். கால், கை குறைபாடு உள்ளோர், கண்பார்வை குறைபாடு உள்ளோர், குள்ள உருவம் படைத்தவர்கள் என வகைப்படுத்தி, சப்.ஜூனியர், ஜூனியர், சீனியர் பிரிவினருக்கான 50 மீட்டர் பிரிஸ்டைல், பேக்ஸ்ட்ரோக், பட்டர்பிளை, பிரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.

இதில் தமிழ்நாடு அணியினர் 17 தங்கம், 16 வெள்ளி, 11 வெண்கலப்பதக்கங்களை வென்று, தேசிய அளவில் 3ம் இடத்தை பிடித்தனர். சாதனை படைத்த வீரர்களையும், பயிற்சி அளித்த தேனி மாவட்ட நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் ஆகியோரை தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு சங்கத் தலைவர் சந்திரசேகரன், துணைத் தலைவர் கிருபாராஜா, செயலாளர் ஆனந்தஜோதி, தேனி மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் ஆகியோர் பாராட்டினர்.

விளையாட்டில் சாதனைபடைத்த தருமபுரியை சேர்ந்த இரு கைகளும் இல்லாத அரசுப்பள்ளி தமிழ்ஆசிரியர் வெங்கடேசன், தேனி கரட்டுப்பட்டியை சேர்ந்த பிறவிக்குள்ளமான சிவக்குமார் ஆகியோர் கூறுகையில், ‘‘மாற்றுத்திறனாளி நீச்சல் வீரர்கள் உலக அளவில் சாதனை செய்தாலும், பாராட்டும், பதக்கம் மட்டுமே கிடைக்கிறது. எங்களது திறமையை அங்கீகரிக்கும் வகையில் அரசுத் துறை வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். இதுகுறித்து அரசுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இனியாவது எங்களைபோன்ற மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்க அரசு விளையாட்டில் சாதனைபடைப்போருக்கு அரசு வேலைவழங்க முன்வரவேண்டும்’’ என்றனர்.

Related Stories:

>