உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி.ரமணாவின் பெயர் பரிந்துரை: தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக செயல்பட்டு வருபவர் எஸ்.ஏ. பாப்டே ஆவார். எஸ்.ஏ. பாப்டே 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். பாப்டேவின் பதவி காலம் வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால் புதிய தலைமை நீதிபதியை தேர்ந்தெடுக்கவுள்ளனர். உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யாரை நியமிப்பது என்பது குறித்து பரிந்துரை அளிக்கும்படி தற்போதைய தலைமை நீதிபதியான பாப்டேவிற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதற்கு உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி. ரமணாவின் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி பாப்டே பரிந்துரை செய்துள்ளார். பாப்டேவுக்கு அடுத்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருப்பவர் என்.வி.ரமணா ஆவார். எனவே தலைமை நீதிபதியின் பரிந்துரை ஏற்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த பரிந்துரை ஏற்கப்படும் பட்சத்தில் என்.வி.ரமணா உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார். புதிதாக பதவியேற்க உள்ள என்.வி. ரமணா 2022 ஆகஸ்ட் மாதம் வரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதிவியில் இருப்பார் என கூறப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த என்.வி.ரமணா 2014-ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது அங்கு இணையதள சேவை துண்டிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் காஷ்மீரில் இணையதள சேவை முடக்கப்பட்டதை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது, அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் அமர்வில் என்.வி. ரமணாவும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>