×

சோளிங்கர் அருகே 37 ஆடுகள் மர்ம சாவு

சோளிங்கர் : சோளிங்கர் கொண்டபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிச்சாண்டி(52), கூலி தொழிலாளி. இவர் 40க்கும் மேற்பட்ட  ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்சலுக்காக வட கடப்பந்தங்கல் ஊராட்சிக்குட்பட்ட எம்ஜிஆர் நகர் அருகே உள்ள ஒரு காட்டுப்பகுதியில் ஓட்டி சென்றார்.

அப்போது மலைப்பகுதியில் தீயில் கருகிய முள்வேலம் மரத்தின் காய்களை ஆடுகள் மேய்ந்ததாக தெரிகிறது. பின்னர் மாலை 5 மணியளவில் அதே பகுதியில் உள்ள ஒரு குளத்தில் நீர் அருந்தி உள்ளது. சிறிது நேரத்தில் 37 ஆடுகள் ஒரே நேரத்தில் திடீரென பிச்சாண்டியின் கண்ணெதிரிலேயே ஒன்றன் பின் ஒன்றாக மர்மமான முறையில் துடிதுடித்து இறந்தது.

ஆடுகள் திடீரென இறந்து போனதை பார்த்து அதிர்ச்சியடைந்த பிச்சாண்டி, கண்ணீர் விட்டு அழுதார். மேலும், ஆடுகளின் மர்ம சாவு குறித்து ஆய்வு செய்வதற்கு கால்நடை மருத்துவர் வராததால் வேறுவழியின்றி அனைத்து ஆடுகளையும் கொண்டபாளையம் எடுத்துச்சென்று குழி தோண்டி புதைத்ததாக பிச்சாண்டி தெரிவித்தார்.

இதுகுறித்து கால்நடை மருத்துவர் வேல்முருகன் கூறுகையில், ஆடுகள் எப்படி இறந்தது என்பது குறித்து பிரேத பரிசோதனை செய்வதற்காக நேற்று காலை வருவதாக பிச்சாண்டியிடம் கூறியிருந்தேன்.  அதன்படி காலை பிச்சாண்டி வீட்டுக்கு சென்றபோது பிச்சாண்டி வீட்டில் இல்லை. வீட்டில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது இறந்து போன அனைத்து ஆடுகளையும் குழிதோண்டி புதைத்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும் உயிருடன் உள்ள சில ஆடுகளுக்கு ஊசி போடுவதற்காக ஆடுகளை அழைத்துவர கூறினோம். ஆனால், அவர்கள் ஆடுகளை அழைத்து வராததால் நாங்கள் திரும்பி வந்து விட்டோம் என்றார்.

உதவி செய்ய கோரிக்கை

பிச்சாண்டி குடும்பத்திற்கு வாழ்வாதாரமாக விளங்கிய ஆடுகள் அனைத்தும் மர்மமான முறையில் இறந்து போனதால் குடும்பம் நடத்த வேறு வழி தெரியவில்லை. எனவே மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உதவி செய்து எங்கள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என பிச்சாண்டி குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Cholingar , Cholingar: Pichandi (52), a laborer, hails from Cholingar Kondapalayam area. He raises more than 40 sheep.
× RELATED சோளிங்கரில் பாதிக்கப்பட்ட 2...