×

டெல்லியில் அதிகரிக்கும் கொரோனாவால் ஹோலி, நவராத்திரி பண்டிகையைப் பொதுவெளியில் கொண்டாடத் தடை விதிப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து டெல்லியில் ஹோலி, நவராத்திரி, ஷாப் இ பரத் ஆகிய பண்டிகைகளைப் பொதுவெளியில் மக்கள் கொண்டாடுவதற்கு டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் டி.டி.எம்.ஏ தடை விதித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் டெல்லி விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் வரும் பயணிகளுக்கு அடிக்கடி கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி, கர்நாடகா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 4 நாட்களாக நாள்தோறும் 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று 47 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதையடுத்து டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் புதிய உத்தரவை நேற்று பிறப்பித்துள்ளது. டெல்லி மாநில உள்துறைச் செயலாளர் விஜய் தேவ்  வெளியிட்ட அறிக்கையில், டெல்லி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் ஹோலி, ஷாப் இ பரத், நவராத்திரி ஆகிய பண்டிகைகளில் பொதுவெளியில் மக்கள் கூடிக் கொண்டாடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. இதுபோல் பொது இடங்கள், மைதானங்கள், பூங்காக்கள், சந்தைகள், வழிபாட்டுத் தலங்களில் மக்கள் கூடவும் தடை விதிக்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக டெல்லி என்சிஆர் பகுதிகளில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதைக் கண்காணித்து வருகிறோம். பொது இடங்கள், மைதானங்கள், பூங்காக்கள், சந்தைகள், வழிபாட்டுத் தலங்களில் போன்றவற்றில் மக்கள் கூடும்போது தொற்று மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால் தடை விதிக்கப்படுகிறது.

இந்த உத்தரவை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், துணை ஆணையர்களும் தீவிரமாகக் கடைப்பிடித்து மக்கள் கூட்டம் கூடுவதைத் தடுக்க வழிவகைச் செய்ய வேண்டும். கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கும் இடங்களில் பரிசோதனை, தனிமைப்படுத்துதல், கண்காணிப்பு ஆகியவற்றைத் தீவிரப்படுத்த வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்களில் அடிக்கடி பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும். அந்தப் பரிசோதனையின் முடிவுகள் வந்த பின்புதான் அவர்களை அனுமதிக்க வேண்டும். பயணிகளில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் 10 நாட்கள் மருத்துவமனை அல்லது கொரோனா சிகிச்சை மையத்தில் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க வேண்டும் என்று டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Holi ,Navratri ,Delhi , Prohibition of public celebration of Holi and Navratri festivals by increasing corona in Delhi
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!