×

பெரும்பாக்கம் மலையிலிருந்த சிவலிங்கம் அகற்றம்: பொதுமக்கள் போராட்டம்

வேளச்சேரி: மேடவாக்கம் அடுத்த அரசன்கழனி, பெரும்பாக்கம் இடையே சிறிய மலை உள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் அந்த மலை மீது ஆடு, மாடு மேய்க்க சென்றவர்கள், மலை உச்சியில் புதைந்திருந்த சிவ லிங்கத்தை கண்டனர். பின்னர் அரசன்கழனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள், அந்த சிவலிங்கத்தை  வழிபட்டு  வந்தனர். இந்நிலையில், மேலும், இரண்டு சிவலிங்கமும், ஊர் மக்கள் சார்பில் அங்கு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பிரதோஷம், சிவராத்திரி போன்ற விழாக்கள் அங்கு பொதுமக்கள் சார்பில் நடத்தப்படுகிறது. சமீபத்தில் மகா சிவராத்திரி அன்று ஏராளமான பக்தர்கள் மலைக்கு சென்று வழிபாடு நடத்தினர். இந்நிலையில், திடீரென மேடவாக்கம் வனத்துறை அலுவலர் அலெக்சாண்டர் இந்த மலையில் இருந்த சிவலிங்கத்தை பெயர்த்து எடுத்து சென்றுள்ளார்.

இத்தகவல் காட்டு தீயாக அப்பகுதியில் பரவியது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள்  மேடவாக்கம் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த பள்ளிக்கரணை மற்றும் பெரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு  விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, சிவலிங்கத்தை வனத்துறையினர் திருப்பி வழங்கினர். அதை  மலையில் வைத்து வழிபாடு நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டது. லிங்கத்தை பெற்ற பொதுமக்கள் மீண்டும் மலையில் வைத்து வழிபாடு நடத்தினர்.



Tags : Shivalingam ,Perumbakkam Hill , Removal of Shivalingam from Perumbakkam Hill: Public Struggle
× RELATED தனியார் ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 3 பேர் கைது