×

தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீட்டை மராத்தா வழக்குடன் ஒப்பிட முடியாது: உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா, 2018ம் ஆண்டு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து மும்பை உயர்  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், இந்த இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர்  நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க மறுத்தது. அதோடு, இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. இதை கடந்த 6 நாளாக அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

 , நீதிபதிகள் அசோக் பூஷன், நாகேஸ்வர ராவ், அப்துல் நசீர், ஹேமந்த் குப்தா மற்றும் ரவீந்திர பட் அமர்வில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மகாராஷ்டிரா மாநில அரசு தரப்பில் செய்யப்பட்ட வாதத்தில்,  “நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் 50 சதவீதம் இடஒதுக்கீடு பின்பற்றி வரும் நிலையில், தமிழகத்தில் 69 சதவீதம் நடைமுறையில் உள்ளது,’ என கூறப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீதம்  இடஒதுக்கீடு, அரசியல் அமைப்பின் 9வது அட்டவணையில் சட்ட பாதுகாப்பு பெற்றுள்ளது. அதனால், மராத்தா இடஒதுக்கீடு வழக்குடன் அதை கண்டிப்பாக ஒப்பிட முடியாது. இருப்பினும், சில தவிர்க்க முடியாத சூழல்களால், மாநில அரசுகள் 50  சதவீதம் இடஒதுக்கீட்டை எல்லையை தாண்ட முடியும். அதில், விதிவிலக்கு இல்லை,’ என்றனர். இந்த விசாரணை 7வது நாளாக இன்றும் விசாரிக்கப்பட உள்ளது.



Tags : Tamil Nadu ,Maratha , 69 per cent reservation in Tamil Nadu cannot be compared with Maratha case: Supreme Court opinion
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...