×

2வது போட்டியிலும் வங்கதேசம் ஏமாற்றம் தொடரை வென்றது நியூசி.: லாதம் அபார சதம்

கிறைஸ்ட்சர்ச்: வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் நியூசி. 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று முன்னிலை வகிக்க, 2வது  போட்டி கிறைஸ்ட்சர்ச், ஹேக்லி ஓவல் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற நியூசி. முதலில் பந்துவீசிய நிலையில், வங்கதேசம் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 271 ரன் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் தமிம் இக்பால் 78 ரன்  (108 பந்து, 11 பவுண்டரி) விளாசி ரன் அவுட்டானார். சர்கார் 32, முஷ்பிகுர் ரகிம் 34, முகமது மிதுன் ஆட்டமிழக்காமல் 73 ரன் (57 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர். நியூசி. தரப்பில் சான்ட்னர் 2, போல்ட், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். வங்கதேசத்துக்கு உதிரிகள் வகையில் 24 ரன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி,  கேப்டன் டாம் லாதம் - டெவோன் கான்வே ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் 48.2 ஒவரிலேயே 5 விக்கெட் இழப்புக்கு  275 ரன் குவித்து வெற்றி வாகை சூடியது. கப்தில் 20, நிகோல்ஸ் 13, வில் யங் 1,  கான்வே 72 ரன் (93பந்து, 7 பவுண்டரி), ஜேம்ஸ் நீஷம் 30 ரன் எடுத்து வெளியேறினர்.  லாதம் 110 ரன் (108 பந்து, 11 பவுண்டரி), டேரில் மிட்செல் 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  வங்கதேச அணியின்  முஷ்டாபிசுர் ரகுமான், மெகதி ஹசன் தலா 2 விக்கெட் எடுத்தனர். லாதம் ஆட்ட நாயகன் விருது பெற்றார். நியூசி. 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், கடைசி ஒருநாள் ஆட்டம்  மார்ச் 26ம் தேதி வெலிங்டனில் நடக்கிறது.

Tags : Bangladesh , Bangladesh win disappointing series in 2nd match
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...