×

மசோதா தற்காலிகமாகத்தான் தாக்கல்: வன்னியருக்கான இடஒதுக்கீடு 6 மாதத்துக்கு மட்டும்தான்: சத்தியம் செய்கிறார் அமைச்சர் உதயகுமார்

மதுரை: வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு 6 மாதம்தான். மசோதா தற்காலிகமாகத்தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அமைச்சர் உதயகுமார் பிரசாரத்தில் தெரிவித்தது, பாமகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சவுடார்பட்டியில் திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளரான அமைச்சர் உதயகுமார் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார்.  

அப்போது அவர் பேசியதாவது: இன்று 20% இடஒதுக்கீடு குறித்து பலரும் பேசுகின்றனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து கொண்டிருப்பதால், 6 மாத தற்காலிக மசோதாவாக இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது 6 மாதம் மட்டும் தற்காலிகமாக செயல்படும் என முதல்வர் சட்டசபையில் அறிவித்துள்ளார். 68 சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு 7.5 சதவீதம் என்றும், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்திற்கு 10.5 சதவீதம் என்றும், இதர சமுதாயத்திற்கு 2.5 சதவீதம் இட ஒதுக்கீடு என கூறி வருகின்றனர். ஆனால் அது உண்மையல்ல. நான் சவுடார்பட்டியிலிருந்து சத்தியம் செய்து சொல்கிறேன்.

மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். கடந்த பிப். 26ம் தேதி சட்டப்பேரவையில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். பாமக மற்றும் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த அமைப்பினர், பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்ததன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்த இட ஒதுக்கீடு தற்காலிகம் தான். ஆறு மாதங்களுக்கு மட்டுமான தற்காலிக ஏற்பாடு என்று தற்போது அமைச்சர் உதயகுமார் பிரசாரத்தில் பேசியது, கூட்டணி கட்சியான பாமகவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Bill ,Wannyam ,Minister ,Udaiakumar , Bill filed temporarily: Reservation for Vanni only for 6 months: Minister Udayakumar swears
× RELATED ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வழக்கு:...