×

தேர்தல் பிரசாரத்துக்கு புறப்பட்ட முகமதுஜான் எம்.பி. மரணம்

வாலாஜா: அதிமுக மாநிலங்களவை எம்.பி.யும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான முகமதுஜான் தேர்தல் பிரசாரத்துக்கு புறப்பட்டபோது நேற்று திடீர் மாரடைப்பால் காலமானார். ராணிப்பேட்டையை சேர்ந்தவர் முகமதுஜான் (72). இவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த காலத்திலேயே கட்சி பணிகளில் ஈடுபட்டார். கடந்த 2011ம் ஆண்டு ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து ஜெயலலிதா ஆட்சியில் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். கடந்த 2019-ம் ஆண்டில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், பின்னர் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் பதவி வகித்தார்.

இந்நிலையில் கடந்த ஒருவார காலமாக ராணிப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமாரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அதன்படி நேற்று காலை முதல் பிற்பகல் 2 மணி வரை பிரசாரத்தில் ஈடுபட்டுவிட்டு மதிய உணவிற்காக தனது வீட்டிற்கு சென்றார்.  உணவு சாப்பிட்டு விட்டு மீண்டும் பிரசாரத்திற்காக வீட்டிலிருந்து கிளம்பும்போது லேசாக ெநஞ்சுவலிப்பதாக குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதனையடுத்து உடனடியாக அவரை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். முகமதுஜானுக்கு ஷாஹின் என்ற மனைவியும், 1 மகளும், 3 மகன்களும் உள்ளனர்.

Tags : Mohammedan , Mohammedan MP leaves for election campaign Death
× RELATED பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டுகோள்