×

மதுபானம் அருந்தும் வயது குறைப்பு அரசின் புதிய கலால் கொள்கையால் டெல்லி போதை நகரமாக மாறும்

புதுடெல்லி: அரசு நடத்தும்  அனைத்து மதுபானக் கடைகளையும் மூடும் ஆம் ஆத்மி அரசின் முடிவுக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதேபோன்று, மூடப்படும் அரசு கடைகளுக்கு மாற்றாக தனியாரை மூன்று மாத கலக்கெடுவுக்குள் நியமிப்பது கடும் சவாலாக இருக்கும் என்று கலால் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். டெலலியில் உள்ள மதுபானக்கடைகளை அரசு வசம் 60 சதவீத கடைகளும், மற்றவை தனியார் வசமும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், தனியாரை காட்டிலும், அரசு மதுபானக்கடைகள் குறைந்த அளவே வருவாய் ஈட்டி வருகிறது. இந்நிலையில், அரசு நடத்தும் அனைத்து மதுபான கடைகளையும் மூட முடிவெடுக்கப்பட்டு இதற்கான ஒப்புதலையும் அமைச்சரவை வழங்கியுள்ளது.
அதேபோன்று மது அருந்துவதற்கான வயது வரம்பையும் 25லிருந்து 21 ஆக குறைத்துள்ளது. தேசிய தலைநகரில், சுமார் 850 மதுபானக் கடைகள்  உள்ளன.  அவற்றில் 475 டெல்லி மாநில தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு  மேம்பாட்டுக் கழகம் (டிஎஸ்ஐஐடிசி), டெல்லி சுற்றுலா மற்றும்  போக்குவரத்து மேம்பாட்டுக் கழகம் (டிடிடிடிசி), டெல்லி மாநில சிவில்  சப்ளைஸ் கார்ப்பரேஷன் (டிஎஸ்சிஎஸ்சி) மற்றும் டெல்லி நுகர்வோர்  கூட்டுறவு மொத்த விற்பனை கடை (டிசிசிடபிள்யூஎஸ்) ஆகிய 4 அரசுத்துறைகள் ஏற்று நடத்தி வருகின்றன.  

அரசாங்கத்தால்  நடத்தப்படும் இந்த மதுபானக் கடைகளின் உரிமங்கள் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டன. இந்த காலத்திற்கு  தனியாரை கொண்டு அரசு மதுபானக்கடைகளை நடத்த நியமிக்க வேண்டும். இது குறுகிய காலம் என்பதால்,அரசு மதுபானக்கடைகளை மூடுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என கலால்துறை ஏற்கனவே அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தது. எனினும், மூன்றுமாத காலம் மட்டுமே அரசு வழங்கியுள்ளது. ஆனால், அரசு மதுபானக்கடைகளில் இருப்பில் உள்ள சரக்குகளை இந்த காலகட்டத்திற்குள் முழுவதும் விற்பனை செய்து கிளியர் செய்ய வேண்டும். இந்த அரசுக்கடைகள் ஏலம் விடப்படுமா என்றால், இந்த விவகாரத்தில் நான்கு அரசுத்துறை நிறுவனங்களுக்கும் அவர்களது விருப்பம் போில் செய்ய அனுமதி வழங்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குடும்ப வன்முறை அதிகரிக்கும்: ஆதேஷ்குப்தா

மது அருந்தும் வயதை 21 ஆக அரசு குறைத்துள்ளதற்கு எதிர்கட்சிகள் கடுமை எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அரசின் இந்த கலால் கொள்கையினால் டெல்லி நகரம் போதைப்பொருட்களுக்கான தலைநகரமாக மாறும் என்றும் கண்டித்துள்ளன. அரசின் புதிய கலால்  கொள்கையை எதிர்த்து டெல்லி பாஜ தலைவர் ஆதேஷ் குப்தா மற்றும் சக கட்சித் தலைவர்களும் துணை நிலை ஆளுநரை சந்திக்க உள்ளதாக பாஜ கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன. அரசின் கலால் கொள்கையை விமர்சித்துள்ள குப்தா, இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”புதிய  கொள்கையானது போலி மதுபானங்களை விற்பனை செய்வதற்கும் குற்றங்களை  ஊக்குவிப்பதற்கும் மட்டுமல்லாமல், குடிப்பதற்கான சட்டப்பூர்வ வயது   21 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளதால் அரசின் இந்த முடிவு இளைஞர்களைக் கெடுக்கும். டெல்லியை பெண்களுக்கு பாதுகாப்பாக வைப்பதற்கும், இளைஞர்களை  மதுபானத்திலிருந்து ஒதுக்கி வைப்பதற்கும் மதுபான கொள்கையை அரசு கடுமையாக்கி இருக்க வேண்டும். அரசின் இந்த முடிவால் குடும்ப தகராறு அதிகரிக்கும். இதில் கூடுதலாக 20 சதவீத வருவாய் கிடைக்கும் என்பதை மட்டும் அரசு கவனத்தில் கொண்டுள்ளது. ஆனால், அதனால் ஏற்படும் சமூக விளைவுகளை கருத்தில் கொள்ளவில்லை\” என தெரிவித்துள்ளார்.

பா.ஜ மாற்றினால் நாங்களும் மாற்றுவோம்
ஆம்ஆத்மி செய்தி தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் கூறியதாவது: பா.ஜ ஆளும் உபி, உத்தரகாண்ட், மபி, அருணாச்சல் உள்ளிட்ட மாநிலங்களில் மதுஅருந்தும் வயது 21ஆகு உள்ளது. கோவாவில் 18 வயதாக உள்ளது. அந்த மாநிலங்களில் குறைந்தபட்ச மது அருந்தும் வயது 25ஆக நிர்ணயித்தால் டெல்லியில் ஆம்ஆத்மி மதுஅருந்தும் வயதை 30ஆக மாற்றும். டெல்லி பா.ஜ தலைவர் ஆதேஷ்குப்தா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராம்வீர்சிங் பிதூரி ஆகியோர் பா.ஜ ஆளும் மாநிலங்களில் மது அருந்தும் வயதை 25 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்க முடியுமா என்று சவால் விட்டு கேட்கிறேன். அப்படி செய்தால் நாங்களும் இங்கு 30 வயதாக மாற்றுகிறோம். இந்த நடவடிக்கை மூலம் பா.ஜ மாநில வருவாயை தடுத்து, கள்ள மார்க்கெட்டை பாதுகாக்க நினைக்கிறது. ெடல்லியில் மது அருந்தும் வயது 21ஆக குறைத்து இருப்பதால் கள்ள மார்க்கெட் தடுக்கப்படும்.

மேலும் தவறான நிதிபரிமாற்றம் முடக்கப்படும். ஏனெனில் டெல்லியில் உள்ள உணவு விடுதி, பப் ஆகியவற்றில் 21வயது இளைஞர்கள் மது அருந்துவதன் மூலம் உணவு விடுதி உரிமையாளர்களிடம் இருந்து போலீசார் பணம் பெற்று உயர் அதிகாரிகளுக்கு வழங்குகிறார்கள். எங்கள் முடிவால் இதுபோன்ற நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்படும் என்பதால் பா.ஜ ஏமாற்றம் அடைந்துள்ளது. டெல்லி அரசை குறைகூறும் பா.ஜவினர் நாடு முழுவதும் மது அருந்தும் குறைந்தபட்ச வயதை 25ஆக நிர்ணயிக்கும் சட்டத்தை மத்திய அரசு மூலம் கொண்டு வரவேண்டியதுதானே?. அதை செய்யாமல் இதுபோன்று பா.ஜ செய்யும் பாசாங்குத்தனம் எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது. இதுபோன்ற பாசாங்குத்தனத்தை வேறு எந்த அரசியல் கட்சியும் இதுவரை செய்ததில்லை. இதன் மூலம் பா.ஜவின் வெட்கமில்லா நடவடிக்கை தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Delhi , Liquor, government, excise policy, drug city
× RELATED சிறையில் இருந்து ஆட்சி நடத்த...