×

ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் இந்தியா வெளிநடப்பு: ஈழத் தமிழர்களுக்கு மோடி பச்சை துரோகம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் இந்தியா வெளிநடப்புச் செய்திருப்பது ஈழத்தமிழர்களுக்குச் செய்திருக்கும் மாபெரும் பச்சைத் துரோகம் என மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து நேற்று வெளியிட்ட அறிக்கை:  இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று 2 நாட்களுக்கு முன் நான் வலியுறுத்தினேன். ஆனால் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இலங்கைக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்து நழுவியுள்ளது இந்திய அரசு.  

ஈழத்தமிழர்களுக்கு விரோதமான பாஜ அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு என்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய தினம் நடந்த வாக்கெடுப்பில் இந்திய அரசின் பிரதிநிதி பங்கெடுக்காமல் வெளிநடப்புச் செய்துள்ளார்.  இது ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த மன்னிக்க முடியாத மாபெரும் பச்சைத் துரோகம். ஈழத் தமிழர்களை வஞ்சிப்பதை - உலகெங்கும் வாழும் 9 கோடி தமிழர்கள் எந்நாளும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள். இது தமிழ் இனத்திற்கு முற்றிலும் எதிரானது, துரோகமானது. எனவே மிகுந்த கண்டனத்திற்குரியது. இலங்கையின் நிர்ப்பந்தத்திற்கு இந்தியா அடிபணிவது ஏன் என்ற ஆதங்கமும் ஆத்திரமும் ஒவ்வொரு தமிழரின்  உள்ளத்திலும் எரிமலையாய்க் குமுறுகிறது.

தமிழ்நாட்டில் தேர்தல் நடப்பதால் வெளிநடப்பு செய்து நடித்துள்ளார்கள். இல்லாவிட்டால் இலங்கைக்கு ஆதரவாகவே வாக்களித்திருப்பார்கள் என்பது விளங்கிவிட்டது. இது இலங்கைக்கு மிகவும் சாதகமான நிலைப்பாடுதான் என்பதை இலங்கை அரசே ஒப்புக்கொண்டுவிட்டது. வெளிநடப்பு செய்ததற்காக இந்தியாவுக்கு இலங்கை அரசு நன்றி சொல்லி இருக்கிறது. ஈழத்தமிழர்க்கு மோடி இழைத்திருக்கும் பச்சைத் துரோகத்துக்குக் கிடைத்த பாராட்டு நன்றிப் பட்டயம்தான் இது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : India ,UN Human Rights Council ,Modi ,Eelam Tamils ,MK Stalin , India's walkout at UN Human Rights Commission: Modi's green betrayal of Eelam Tamils: MK Stalin's condemnation
× RELATED என்னை வீழ்த்த வெளிநாட்டு சக்திகள் சதி: பிரதமர் மோடி பேச்சு