×

தமிழக மாணவர்களுக்காக நீட் தேர்வு மையங்களை கூடுதலாக அமைக்க வேண்டும்: தேசிய தேர்வு வாரியத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்களிடம் எதிர்வரும் 2021-22ம் கல்வியாண்டில், விண்ணப்பங்களை வரவேற்று, தேசிய தேர்வு வாரியம், பிப்ரவரி 23ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக தமிழகத்தில் 28 தேர்வு மையங்களும்,  புதுச்சேரியில் ஒரு தேர்வு மையமும்  அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், விண்ணப்பங்கள் வாங்க துவங்கிய சில மணி நேரங்களில், தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்வு மையங்கள் நிரம்பி விட்டதாக கூறி, இந்த தேர்வு மையங்கள், ஆன்லைன் விண்ணப்ப படிவங்களில் இருந்து நீக்கப்பட்டன.இதை எதிர்த்தும், தமிழகத்தில் கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்க கோரியும் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரைச் சேர்ந்த வழக்கறிஞர் வீரபிள்ளை ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய தேர்வு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விண்ணப்பிக்கும் மாணவர்கள், தாங்கள் விரும்பும் நகரங்களில் தேர்வு மையங்கள் இல்லாவிட்டால், மற்றவை என்று குறிப்பிட்டால், அதை பரிசீலித்து, அவர்களின் மாநிலத்துக்குள்ளேயே தேர்வு மையங்கள் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள், தேர்வு மையங்களை அதிகரிக்க தற்போது உத்தரவு பிறப்பித்தால் அது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். மாணவர்கள் தங்கள் மாநிலங்களிலேயே தேர்வு எழுதும் வகையில், அடுத்த ஆண்டு கூடுதல் தேர்வு மையங்களை தேசிய தேர்வு வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : Tamil Nadu ,ICC ,National Examination Board , Need to set up additional NEED examination centers for Tamil Nadu students: ICC order to National Examination Board
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...