போக்குவரத்து கழகங்களின் தவறான நடவடிக்கையால் ஆண்டுக்கு 1,400 கோடி வருவாய் இழப்பு: தொமுச மாநில பொருளாளர் கி.நடராஜன்

கடந்த 2011க்கு முன்னர் போக்குவரத்து கழகங்கள் மிகச்சிறப்பாக இயங்கி வந்தது. ஆனால், அதன்பிறகு புதிய பேருந்துகள் எதுவும் வாங்கப்படவில்லை. பழைய பேருந்துகளை இயக்கும் சூழல் உள்ளது. கடந்த 2006 முதல் 2011 வரை திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சி காலத்தில் 13,500 பேருந்துகள் மட்டும் வாங்கப்பட்டன. ஆனால், அதிமுக ஆட்சி  காலத்தில் 10 வருடத்தில் 9 ஆயிரம் பேருந்துகள் தான் வாங்கியுள்ளனர். 1.1.2016க்கு பிறகு போக்குவரத்து கழகத்தில் புதிதாக ஆட்கள் யாரையும் எடுக்கவில்லை. கடந்த 2016ல் ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில் பேருந்து எண்ணிக்கை 23 ஆயிரமாக இருந்தது.  தடத்தில் இயங்கும் பேருந்துகள் 20 ஆயிரமாக இருந்தது. இப்போது பேருந்துகள் எண்ணிக்கை 20 ஆயிரம் ஆகி விட்டது. தடத்தில் இயக்கக் கூடிய பேருந்து ஏறக்குறைய 18 ஆயிரத்துக்கும் கீழே சென்று விட்டது.

அதுவும் கொரோனா காலகட்டத்திற்கு முன்னர் இருந்த நிலைமை தான். இந்த போக்குவரத்து கழகங்கள் நாள் ஒன்றுக்கு 94 லட்சம் கிலோ மீட்டர் பஸ் இயக்கப்பட்டன. ஆனால், இப்போது, 85 லட்சம் கிலோ மீட்டராக குறைத்து விட்டனர். போக்குவரத்து கழகங்களில் பயணிகள் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 2.10 கோடி பேர் பயணித்தனர். இப்போது, 1.60 கோடியாக பயணிகள் எண்ணிக்கை குறைந்து விட்டது. போதுமான பணியாளர்கள் இல்லாமல் பஸ் பராமரிக்கப்படுவதில்லை. பஸ்களுக்கு வாங்கும் உதிரி பாகங்களில் பெருமளவில் ஊழல் நடக்கிறது. பஸ்களில் சுமைகள் ஏற்றப்பட்டு வந்தது. ஓசூர் பணிமனைகளில் மட்டும் நிறைய பூ சுமைகள் ஏற்றப்படுவது வழக்கம். பூ சுமைகளை ஒவ்வொரு பேருந்துகளிலும் ஏற்றப்படும். அந்த மாதிரி ஏற்றும்போது ஒரு நாளைக்கு பூ சுமை மூலம் ஓசூரில் ரூ.3 லட்சம் வரை கட்டணம் வசூலானது. இப்போது அந்த சுமை கட்டணத்தை தனியார் ஏஜென்சியிடம் கொடுத்து விட்டனர்.

இப்போது வெறும் ரூ.30 ஆயிரம் தான் வருமானம் வருகிறது. கும்பகோணம் பணிமனையில் வெற்றிலை, வில்லிப்புத்தூரில் பால்கோவா ஏற்றி வந்தனர். இப்போது அதையும் தனியாரிடம் கொடுத்து விட்டனர். விரைவு போக்குவரத்து கழகத்தில் ரிசர்வேஷன் நாங்கள் செய்து கொண்டிருந்தோம். இதன் மூலம் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.25 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டன. இப்போது ரிசர்வேஷன் கட்டணம் வசூலிப்பதையும் தனியாரிடம் கொடுத்து விட்டனர். இப்படி, எல்லா விஷயங்களையும் பாழ்படுத்தி விட்டனர். மாவட்ட வழித்தடங்களில் உள்ள நகர பேருந்துகளுக்கு டீலக்ஸ் கட்டணம் வசூலிக்கின்றனர். எடுத்த உடனேயே ரூ.7 கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால், தனியார் பேருந்துகள் ரூ.5 சாதாரண கட்டணம் தான் வசூலிக்கின்றனர். இப்படி இருந்தால் எப்படி அரசு பேருந்துகளில் பயணிகள் ஏறுவார்கள்.

இது முழுக்க, முழுக்க தனியார் பேருந்துகளுக்கு சாதகமானதாக இருக்கும். தனியார் பேருந்துக்காக அரசு பேருந்தின் நேரத்தை விட்டு கொடுத்து விட்டனர். முன்னரும், பின்னரும் தனியார் பேருந்துகள் இயக்குகின்றனர். நடுவில் இயக்கப்படும் அரசு பஸ்சில் பயணிகள் ஏறாததால் பேருந்ைத நிறுத்தி விடுகின்றனர். இதனால், பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.1,400 கோடி  வருவாய் இழப்பு ஏற்பட்டது. ஒரு நாளைக்கு 50 லட்சம் பயணிகள் அரசு பேருந்தை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டனர். எங்களுக்கு வசூல் படி பார்த்தால் ஒரு நாளைக்கு ரூ.5 கோடி வருமான இழப்பு ஏற்படுவதற்கு அரசே காரணம். காலாவதியான பேருந்துகள் ஓட்டி வந்த நிலையில், தற்போது  பழுதடைந்து அப்படியே போடப்பட்டுள்ளது. மலைவழித்தடங்கள், கிராமப்புற வழித்தடங்கள் செல்லும் பஸ்களை நிறுத்தி விட்டனர்.

முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, விரைவு போக்குவரத்து கழகத்தில் இருக்க கூடிய வழித்தடங்கள் நாகர்கோவில் பணிமனை நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கும், நெல்லை பணிமனையில் இருந்து சென்னை, மதுரை பணிமனையில் இருந்து சென்னைக்கும் விரைவு போக்குவரத்து கழகம் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. விரைவு போக்குவரத்து கழகத்தில் 1093 பஸ் இருந்தது. இதை 1241 விரைவு பேருந்து கழகமாக மாற்ற போகிறேன் என்று கூறினார்.  ஆனால், அப்படி பஸ் எதுவும் இயக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஆம்னி பஸ்களுக்கு சாதகமாக விட்டு கொடுத்து விட்டனர். இது போன்று போக்குவரத்து கழகத்தின் தவறான முடிவு தான் காரணம். சென்னை மாநகரை பொறுத்தவரையில் மாநகர போக்குவரத்து கழகத்தின் நம்பரை திடீர், திடீரென மாற்றுவார்கள். 17 பி என்று ஓடிக்கொண்டிருக்கும். திடீனெ அந்த பஸ்சை 26 என்று மாற்றி விடுவார்கள். இதனால், மக்கள் குழப்பம் அடைவார்கள்.

எதற்காக இப்படி பஸ் நம்பரை மாற்றினார்கள் என்று யாருக்கும் தெரியாது. சென்னை மாநகரை பார்த்தால் கடந்த 5 வருடத்தில் 2 பணிமனையை மூடி விட்டனர். பெசன்ட்நகர், மகாகவி பாரதியார் நகரில் உள்ள பணிமனையை மூடி விட்டனர். 3,800 பஸ் இருந்த நிலையில், 3200க்கு குறைத்து விட்டனர். 600 பேருந்துகள் வரை இயக்கப்படவில்லை. அதை தாண்டி கொரோனா காலகட்டம் தொடங்கி ேதர்தல் அறிவிப்பு வெளியாகும் வரை வெளிமாவட்டங்களுக்கு இட மாற்றம் என்கிற பெயரில் ஒரு இட மாற்றத்துக்கு ரூ.2.50 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை பெற்று மிகப்பெரிய கொள்ளை அடித்துள்ளனர். போக்குவரத்து துறையில் இப்போதைக்கு ரூ.30 ஆயிரம் கோடி கடன் சுமை உள்ளது. போக்குவரத்து துறையில் கடன் அதிகரிக்க இரண்டு காரணங்கள் தான்.

ஒன்று, போக்குவரத்து கழகங்கள் நகர பேருந்துகள் எல்லா இடத்திலும் நஷ்டத்தில் தான் போகும். கட்டணம் நிர்ணயிப்பது அரசு, இடத்துக்கேற்ப கட்டணம் நிர்ணயம் செய்வது அரசு, உதிரிபாகங்கள் வாங்குகிறது அரசு, டீசல் வாங்குவது அரசு, அதற்கு வரி போடுவதும் அரசு தான். கட்டணத்தை குறைவாக நிர்ணயம் செய்து விட்டு, இயக்கும்போது நஷ்டம் என்று கூறினால் என்ன அர்த்தம். குறைவான கட்டணத்தில் பஸ் இயக்க வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு, இழப்பீடு ஏற்பட்டால் யார் ஈடுகட்ட வேண்டும். கொரோனா காலத்தில் டீசல் ரூ.12 வரை கட்டணம் ஏறுகிறது. அதில், மாநில அரசு மட்டும் 25 சதவீதம் வரி இருக்கிறது.

இதையெல்லாம் செய்து விட்டு, வரியாகவும், வட்டியாகவும் போக்குவரத்து துறையிடம் வசூல் செய்கின்றனர். இப்படி செய்து விட்டு மானியம் தர மாட்டேன் என்று கூறுவது எந்த வகையில் நியாயம். மாணவர்கள் சலுகைக்கு பணம் தருவதில்லை. இப்படி பல பிரச்னைகள் உள்ளது. போக்குவரத்து கழகத்துக்கு வரும் வருவாயில் 20 சதவீதம் வட்டி மட்டும் கட்டி வருகிறோம். கடன் சுமையை ஏற்றியது அரசு. கடன் சுமையை குறைக்க வேண்டுமென்றால் போக்குவரத்து கழகங்களில் வரவுக்கும்-செலவுக்குமான வித்தியாச தொகையை அரசு ஈடு செய்ய வேண்டும். குறைவான கட்டணத்தில் இயக்கும் போது, அந்த கட்டணத்தை ஈடு செய்வது அரசின் கடமை. கிராமப்புற, மலை வழித்தடங்களில் பேருந்து ஓட்டும்போது, அந்த கட்டண இழப்பு ஈடு செய்வது அரசின் பொறுப்பு என்பதை உணர வேண்டும்.

Related Stories:

>