×

மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து சாத்தூர் சுற்றுவட்டார பகுதியில் 200 தீப்பெட்டி ஆலைகள் மூடல்: லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு

சாத்தூர்: மூல பொருட்களின் விலை உயர்வை கண்டித்து சாத்தூர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. இதில் பல லட்சம் தொழிலாளர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைபார்த்து வருகின்றனர். தீப்பெட்டி தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களான தீக்குச்சி, மருந்து பொருள்கள், பண்டல்தாள்கள் உள்ளிட்ட பொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வெளி மாநிலங்களில் இருந்து வரும் பொருட்களின் விலை உயர்வால் ஒரு தீப்பெட்டி பண்டலுக்கு ரூ.50 நஷ்டம் எற்படுகிறது.
தேவைக்கு அதிகமான தீப்பெட்டி பண்டல்கள் இருப்பில் இருப்பதால் தொடர்ந்து சிறிய, பெரிய  தொழிற்சாலைகள் தீப்பெட்டி உற்பத்தியை தொடர முடியாமல் திணறி வருகின்றன. இதனால் தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள் வரும் 31ம் தேதி வரை தீப்பெட்டி ஆலைகளுக்கு தொடர் விடுமுறை அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் நேற்று முதல் சாத்தூர் சுற்றுவட்டார பகுதியில் 200க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. ஆலைகள் மூடப்பட்டதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

இதுகுறித்து தீப்பெட்டி ஆலை உரிமையாளர் லட்சுமனன் கூறுகையில், ‘நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டீசல் விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் பண்டல் வாடகையை உயர்த்துகின்றனர்.  தீப்பெட்டி தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. மூலப்பொருட்களின் விலை உயர்வால் நஷ்டம் ஏற்படுகிறது. மூல பொருட்களின் விலை குறைக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி தீப்பெட்டி ஆலைகளுக்கு தொடர் விடுமுறை அறிவித்து மூடியுள்ளோம்’ என்றார்.


Tags : Sathur Circular Region , In the vicinity of Sattur condemning the rise in prices of raw materials Closure of 200 match factories: Millions of workers lose their jobs
× RELATED உதகை அருகே உள்ள சின்கோனா கிராம...