×

தங்கக்கடத்தல் வழக்கு: கேரள போலீசார் மீது சிபிஐ விசாரணை கோரி அமலாக்கப்பிரிவு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்

திருவனந்தபுரம்: கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் தங்க கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயன் மீது அவதூறு பரப்ப அமலாக்கப் பிரிவு திட்டமிட்டதாக கூறி கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கேரள போலீசாரின் இந்த செயல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அமலாக்கப்பிரிவு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்தைப் பயன்படுத்தி ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க கடத்தல் வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷை மிரட்டி, முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக வாக்குமூலங்களை அளிக்க அமலாக்கப்பிரிவு கட்டாயப்படுத்தியதாக ஆடியோ ஒன்று வெளியானது. அதுமட்டுமல்லாமல் ஸ்வப்னா சுரேஷுடன் காவலுக்கு சென்ற இரு பெண் போலீசார் கூறுகையில், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஸ்வப்னா சுரேஷை விசாரித்தபோது, முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூற வலியுறுத்தினர் எனத் தெரிவித்துள்ளனர். இதனை அடிப்படையாக வைத்து முதல்வர் மீது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டு அவதூறு பரப்ப முயன்றதாக கேரளா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்த கேரள போலீசாரின் செயல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்த வழக்கில் உள்ள சதித் திட்டத்தைக் கண்டுபிடிக்க சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Enforcement Division High Court ,CBI ,Kerala , Enforcement Division
× RELATED குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில்...