×

100 சதவீத வாக்களிப்பினை வலியுறுத்தி காவல்துறை விழிப்புணர்வு பேரணி

திருவாரூர் : திருவாரூர் நகராட்சி பகுதியில் 100 சதவீத வாக்களிப்பினை வலியுறுத்தி நடைபெற்ற காவல்துறை விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சாந்தா துவக்கி வைத்தார்.திருவாரூர் நகராட்சி பகுதியில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை திருவாரூர் புதிய ரயில் நிலையத்திலிருந்து கலெக்டர் சாந்தா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறுகையில், அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்காக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்வு தளங்கள் அமைக்கப்பட்டு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி நடைபெறவுள்ள தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் போன்றவர்கள் தபால் வாக்கு அளிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. எனவே வாக்குச்சாவடி மையங்களுக்கு வர முடியாதவர்கள் இதுபோன்ற தபால் வாக்கினை பயன்படுத்தியும் மாவட்டம் முழுவதும் 4 எம்எல்ஏ தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்களிப்பு நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு வாக்காளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.நிகழ்ச்சியில் எஸ்.பி., கயல்விழி, திருவாரூர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசந்திரன், உதவி அலுவலர் நக்கீரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Rally , Thiruvarur: Collector Santa launches Police Awareness Rally in Thiruvarur Municipality demanding 100% turnout
× RELATED மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி