×

4 முறை தொடர் வெற்றி பெற்றும் வைகை ஆற்றில் தரைப்பாலம் அமைக்க முன்வராத எம்எல்ஏக்கள்

மானாமதுரை:  சட்டமன்ற தேர்தலின் போது மட்டும் அதிமுகவால் பொதுமக்களுக்கு வாக்குறுதியாக கூறப்படும், கன்னார்தெரு மேம்பாலம் கட்டும் திட்டம் 15 ஆண்டுகளாக நிறைவேற்ற படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மானாமதுரை பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்ற
னர்.

தேர்தல் வரும்போதெல்லாம் தேர்தல் பிரசாரத்தின் போது மானாமதுரை பகுதி வாக்காளர்களுக்கு அனைத்து கட்சிகளின் சார்பில் பொதுவாக வழங்கப்படும் வாக்குறுதி கன்னார்தெரு தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாகும். நல்ல தண்ணீர், குடியிருப்பு வசதி, ரயில், பஸ் போக்குவரத்து என அடிப்படை வசதிகள் நிறைந்த ஊராக மானாமதுரை இருப்பதால் சிவகங்கை, காரைக்குடி நகராட்சிகளை தவிர்த்து மானாமதுரை
யில் குடியேற பெரும்பான்மையோர் விரும்புகின்றனர்.

இதுதவிர மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களின் மத்தியில் இருப்பதால் சிவகங்கை, பரமக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட வெளியூர்களில் வேலை செய்பவர்கள் மானாமதுரையில் குடியிருக்க விரும்புகின்றனர். இதனால் மானாமதுரை நகரை சுற்றிலும் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது.

மானாமதுரை பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து உச்சிமாகாளியம்மன் கோயில் பகுதி, அண்ணா சிலை, தேவர் சிலையிலிருந்து சந்தைபேட்டை ரோடு வரை தினமும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் பீக் அவர்ஸ் நேரங்களில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள்,பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.

இப்பிரச்னையை தீர்க்க 15 ஆண்டுகளுக்கு முன் வணிகர் சங்கங்கள், பொதுநல அமைப்புகள், சுற்றியுள்ள 14 கிராமங்களை சேர்ந்தவர்கள் கன்னார்தெரு பழைய பஸ் ஸ்டாண்டு இடையே உள்ள வைகை ஆற்றில் பாலம் அமைக்க கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக திமுக ஆட்சியில் பாலம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு தனியார் துறையின் கள ஆய்வு, திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது.

அப்போதைய நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த தா.கிருஷ்ணன் தலைமையில் கன்னார்தெரு தரைப்பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
அதன்பின் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் இங்கு வெற்றி பெற்றபோதும் பாலப்பணிகளை துவங்குவதில் அக்கறை காட்டவில்லை.

பாலம் கட்ட நிதிஒதுக்காத நிலையில் கடந்த 13 ஆண்டுகளாக வாகனப்பெருக்கம் அதிகரித்துள்ளதாலும் ஆற்றின் இருபுறமும் கரைகள் அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மழை, வெள்ளக்காலங்களில் அண்ணாசிலை அருகே அமைக்கப்பட்டுள்ள மேம்பாலம் வழியாக மட்டுமே செல்ல வேண்டிய நிலை உள்ளதால் 2 கிலோ மீட்டர்சுற்றி செல்ல வேண்டியுள்ளது.

அதிமுக மறந்த வாக்குறுதி

கன்னார்தெரு, மூங்கில் ஊரணியை சேர்ந்தவர்கள் கூறுகையில், அழகர்கோயில்தெரு, கன்னார்தெரு, மூங்கில் ஊரணி, செட்டிகுளம், ஆண்டிகுளம், வண்ணான்குளம், குண்டுகுளம், கோட்டை நகர், தாகியார் நகர், வின்சென்ட் நகர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றை கடந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக ரயில்வே ஸ்டேசன், புது பஸ் ஸ்டாண்ட் செல்லவேண்டும்.

கன்னார் தெரு போலீஸ் ஸ்டேசன் வழியாக பழைய பஸ் ஸ்டாண்டை இணைக்கும் வகையில் பாலம் கட்ட நடவடிக்கை எடுத்தால் வைகை மேம்பாலம் வழியாக சுற்றி செல்லும் நேரமும், போக்குவரத்து நெரிசலும் குறையும். எனவே அடிக்கல் நாட்டப்பட்ட கன்னார்தெரு தரைப்பாலம் கட்ட வாக்குறுதி கொடுப்பதோடு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த மூன்று சட்டசபை தேர்தல்களிலும் அதிமுகவே வென்றுள்ளது. ஆனாலும் தேர்தலுக்குபின் கண்டுகொள்ளப்படுவதில்லை என்றனர்.

Tags : Vaigai River , Manamadurai: AIADMK will make a promise to the public only during the assembly elections.
× RELATED கடமலை-மயிலை ஒன்றியத்தில் கழிவுநீரால் மாசடையும் மூலவைகை ஆறு