×

அத்தியூர் கிராமத்தில் உள்ள ஊர் குளத்தில் நீரூற்று அமைத்த முன்னாள் ராணுவ வீரர்-பொதுமக்களிடையே வரவேற்பு

கண்ணமங்கலம் : ஆரணி அடுத்த பூசிமலைக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட அத்தியூர் கிராமத்தில் உள்ள ஊர் குளத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அழகிய செயற்கை நீரூற்று ெபாதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.ஆரணி அடுத்த பூசிமலைக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட அத்தியூர் கிராமத்தில் வசிப்பவர் தங்கராஜ்(58). முன்னாள் ராணுவ வீரர்.

இவரது மனைவி கிருஷ்ணவேணி(50), ஊராட்சி மன்ற தலைவர். இவர்கள் இருவரும் சொந்த செலவில் ஊரில் உள்ள குளத்தின் நடுவே செயற்கை நீரூற்றும் அதனை சுற்றி வண்ண மின்விளக்குகளும் அமைத்தனர். இதுகுறித்து முன்னாள் ராணுவ வீரர் தங்கராஜ் கூறுகையில், நான் ராணுவத்திலிருந்த காலத்தில் இந்தியா முழுவதும் பணியாற்றி இருக்கிறேன். அப்போது என் மனைவி, பிள்ளைகள் என்னுடன் இருந்தனர். அவர்களை சுற்றுலா தலங்களுக்கு அழைத்து சென்று காண்பித்துள்ளேன். அங்கெல்லாம் பல்வேறு விதமான செயற்கை நீர்வீழ்ச்சிகள், மின் விளக்கு அலங்காரங்கள் பார்த்து வியப்பாக இருக்கும்.
 
இந்நிலையில் நான் ஓய்வு பெற்று வந்தபின் அதேபோல் நம் கிராமத்திற்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எங்கள் கிராமம் பாரதிராஜா படத்தில் வருவது போல பின்புறம் மலைத்தொடரும், முன்புறமும் பசுமையான விவசாய நிலங்களும் கொண்டது. ஊர் நுழைவு வாயிலில் உள்ள பெரிய குளக்கரையில் ஆலமரம், அரசமரத்துடன் செல்லியம்மன், அங்காளம்மன், முனீஸ்வரன் ேகாயில்களும், குளத்தில் நடுவே தாமரை பூக்களும் பூத்து அழகாக காட்சியளிக்கும்.

கிராம மக்கள் பொழுது போக்க இதையே பூங்கா போல் அமைத்தால் இன்னும் அழகாக இருக்கும் என தோன்றியது. இதனை தொடர்ந்து குளத்தின் மையப்பகுதியில் மின்மோட்டார் அமைத்து நீரூற்றும். மையப்பகுதியிலிருந்து குளக்கரையை சுற்றி வண்ண மின் விளக்குகளும் பிரமாண்டமாய் அமைத்தோம்.

இதனை தொடர்ந்து மாலை நேரங்களில் குளக்கரையில் உள்ள அரச மரத்தடி படிக்கட்டுகளில் சிறுவர் சிறுமிகள் முதல் இளைஞர்கள், பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக பயன்படுத்தி வருகின்றனர். அன்று நாட்டுக்காக ேசவை செய்ததும், இன்று கிராமத்திற்காக நம்மால் முடிந்ததை செய்ததும் மனநிறைவை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள நல்ல விஷயங்களை தேடி அவற்றை அழகு படுத்த  இளைஞர்களும், ராணுவ வீரர்களும் முன் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இவர் கடந்த பத்து வருடங்களாக ஊராட்சி துணைத்தலைவராகவும், தற்போது இவரது மனைவி ஊராட்சி தலைவராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.இந்த கிராமத்திற்கு வரும் வெளியூர்காரர்கள் இந்த குளத்தில் அமைக்கப்பட்டுள்ள நீரூற்று மற்றும் மின் அலங்காரத்தை  அதிசயமாக பார்த்து செல்கின்றனர்.

Tags : Attiyoor , Kannamangalam: Arani next to Poosimalaikkuppam panchayat in Attiyur village
× RELATED அத்தியூர் வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை