அடுத்து எனக்காக என்ன கதை வைத்துள்ளீர்கள்!: சிவசாமி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்த இயக்குநர் வெற்றிமாறனுக்கு நடிகர் தனுஷ் நன்றி..!!

சென்னை: அசுரன் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்ற நடிகர் தனுஷ் இயக்குநர் வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சிவசாமி என்ற கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைத்த இயக்குநர் வெற்றிமாறனுக்கு நன்றி என தனுஷ் குறிப்பிட்டுள்ளார். 2019ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதில் சிறந்த தமிழ் படமாக தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அசுரன் படத்தில் நடித்த தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. பூமணியின் வெக்கை நாவலை கொண்டு அசுரன் படத்தை வெற்றி மாறன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் ஜோடியாக நடித்திருந்தனர்.

தனுஷ் இளைஞராகவும், வயதானவராகவும் இரு தோற்றங்களில் நடித்திருந்தார். தனுஷ் நடித்த படங்களில் அதிக வசூல் சாதனை செய்த படம் என்ற பெயர் அசுரனுக்கு கிடைத்தது. சாதிய ஒடுக்குமுறைகளை பேசும் படமான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஏற்கனவே வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் ஆடுகளம் படம் தேசிய விருது பெற்ற நிலையில், தற்போது இந்த கூட்டணி மீண்டும் ஒரு விருதை தேசிய விருதை தட்டி தமிழ் சினிமாவை பெருமை கொள்ளச் செய்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் தனுசுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அசுரன் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்ற நடிகர் தனுஷ் இயக்குநர் வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சிவசாமி என்ற கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைத்த இயக்குநர் வெற்றிமாறனுக்கு நன்றி. வெற்றிமாறனின் 4 படங்களில் நடித்தது, 2 படங்களை தயாரித்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். பாலு மகேந்திரா அலுவலகத்தில் வெற்றிமாறனை பார்த்ததும் அவர் நண்பராக, சகோதரராக மாறுவார் என நினைக்கவில்லை. என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், நான் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் அளவிடமுடியாதது. எனக்காக அடுத்து எனக்காக என்ன கதை வைத்துள்ளார் என்பதை அறிய காத்திருக்க முடியவில்லை என தனுஷ் குறிப்பிட்டுள்ளார். மேலும், வா அசுர வா இசையமைத்தற்தாக ஜி.வி.பிரகாஷுக்கும் தனுஷ் நன்றி தெரிவித்திருக்கிறார்.

Related Stories:

More
>