×

முன்னாள் அமைச்சர் வளர்மதியின் மகன் நடத்தும் கல்குவாரியை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் போராட்டம்: செங்கல்பட்டில் பரபரப்பு

சென்னை: மதுராந்தகம் அடுத்த தச்சூரில் செயல்படும் அதிமுக முன்னாள் அமைச்சரின் கல்குவாரியை தடைசெய்யவேண்டும். இல்லையென்றால் தேர்தலை புறக்கணிப்போம் என்று கூறி நூற்றுக்கணக்கான பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுராந்தகம் அடுத்த தச்சூரில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதியின் மகனுக்கு சொந்தமான  கல்குவாரி  செயல்படுகிறது. இந்த குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி 10 கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் நேற்று செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், நாள் ஒன்றுக்கு குவாரியிலிருந்து ஆயிரக்கணக்கான லாரிகள் சக்கை, கல், மண், ஜல்லிகள் ஏற்றிசெல்கிறது.

இதனால் கிராம சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இங்கு வசிக்கும் எங்களுக்கு விவசாயம் தான் தெரியும்.  இவ்விவசாய நிலங்களை சுற்றி அமைந்துள்ள ஏரி, குளங்கள், மலைகள், நீர் நிலைகள் மண் வளங்கள் விவசாயத்திற்கு மிக முக்கிய ஆதாரங்களாக உள்ளன. குவாரியில் பாறைகளை பிளக்க பயங்கரமான சக்தி வாய்ந்த வெடிகளை வைத்து உடைக்கும்போது மிகவும் நில அதிர்வுகள் மற்றும் விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பாமர சாமானிய மக்களின் வீடுகள் மற்றும் கோயில்கள், அங்கன்வாடி, பள்ளிகள், மருத்துவமனை கட்டிடங்களில் விரிசல் ஏற்படுகிறது. மேலும் இந்த குவாரியால் எங்களின் வாழ்வாதாரம் சீர்குலைந்துவிடும். எங்கள் உயிர்களுக்கு பேராபத்து ஏற்படும்.எனவே இதனை நிரந்தரமாக மூடவேண்டும். இல்லையென்றால் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை தச்சூர், வீராணகுன்னம், குன்னத்தூர், பேக்கரனை, விழுதமங்கலம் உள்ளிட்ட 10 கிராமங்களைச் சேர்ந்த நாங்கள் புறக்கணிப்போம்’ என்றனர்.

Tags : minister ,Valarmati ,Chengalpattu , AIADMK, struggle
× RELATED காஞ்சிபுரம் தொகுதியை பாமகவுக்கு...