×

கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ் கால அவகாசம் நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2ம் டோஸ் தடுப்பூசி போடும் கால அளவு 6 முதல் 8 வாரங்களாக நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த இரண்டு தடுப்பூசிகளையும் இரண்டு தவணைகள் செலுத்தப்படவேண்டும். இதுவரை 4.5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் செயல்திறன் குறித்து ஆய்வு செய்த வல்லுநர் குழுவினர், இரண்டு தவணை தடுப்பூசிக்கு இடையிலான கால அவகாசத்தை நீட்டிக்கும்படி மத்திய அரசுக்கு பரிந்துரைகளை வழங்கி உள்ளனர். அதன் அடிப்படையில் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது.

அதில், தற்போது நான்கு வாரங்களாக இருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸின் கால அளவை 6 முதல் 8 வாரங்களாக உயர்த்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரண்டு டோஸ்களுக்கும் இடையேயான கால இடைவெளியை அதிகரிப்பதன் மூலம் தடுப்பூசியின் பலன் அதிகமாக இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் மத்திய அரசு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது. மேலும், இந்த கால அவகாச நீட்டிப்பு கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கோவாக்சின் தடுப்பூசியை வழக்கமான கால இடைவெளியிலேயே செலுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

79 சதவிகித பலன்
இந்தியாவில் கோவிஷீல்டு என பெயரிடப்பட்டுள்ள அஸ்ட்ரஜெனகாவின் தடுப்பூசி ஏறக்குறைய 50 நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அமெரிக்காவில் மட்டும் இதுவரை அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. இதனால் பரிசோதனை அடிப்படையில் 30 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு போடப்பட்டு இருந்தது. இந்த கிளினிக்கல் டிரையல் மூலம் 79 சதவிகிதம் பலன் தந்ததாகவும், யாருக்கும் பக்கவிளைவுகள் எதுவுமில்லை என்றும் தற்போது தெரிய வந்துள்ளது. கடந்த வாரம் ரத்தம் உறைதல் பக்கவிளைவு காரணமாக சுமார் 12 நாடுகள் அஸ்ட்ராஜெனகாவின் தடுப்பூசியை தற்காலிகமாக நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags : Covshield vaccine, 2nd dose, extension, federal
× RELATED ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி,...