×

உத்தரகாண்ட் முதல்வர் மீண்டும் சர்ச்சை: 20 குழந்தை பெத்துக்கிட்டா அதிக ரேஷன் கிடைக்குமே

டேராடூன்: ‘‘20 குழந்தை பெத்துகிட்ட, ரேஷனில் அதிக பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்’’ என உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் கூறியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்ட் மாநில முதல்வராக சமீபத்தில் பதவியேற்ற தீரத் சிங் ராவத் அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி வம்பில் சிக்கிக் கொள்கிறார். கொரோனா ஊரடங்கு பாதிப்பால், பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒவ்வொரு வீட்டிற்கும் 5 கிலோ உணவு தானியங்கள் மற்றும் ஒரு நபருக்கு ஒரு கிலோ பருப்பு வகைகளை வழங்குகிறது. இதில் குறைவான உறுப்பினர்கள் உள்ள குடும்பங்களுக்கு குறைவான ரேஷன் மட்டுமே கிடைப்பதாக சிலர் குறை கூறுவதாக செய்திகள் வெளியாகின.
இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத், ‘‘குடும்பத்தில் ஒருவர் மட்டும் இருந்தால் 5 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.

10 பேர் இருந்தால் 50 கிலோ கிடைக்கும். 20 பேர் இருந்தால் 100 கிலோ ரேஷன் கிடைக்கும். ஆனால் 2 குழந்தைகளை மட்டுமே கொண்ட குடும்பத்தினர் தங்களுக்கு குறைவான ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர். மற்றவர்கள் அதிக ரேஷன் வாங்குவதை கண்டு பொறாமைப்படாதீர்கள். 2 குழந்தையோடு நிறுத்திக் கொண்டது யார் தவறு? 20 குழந்தைகளை பெற்றுக் கொண்டால், அதிக ரேஷன் கிடைத்திருக்குமே. ஏன் அதை செய்யக் கூடாது’’ என்றார். இதற்கு முன், கிழிந்த ஜீன்ஸ் அணிந்த பெண்கள் இந்த சமூகத்திற்கு எப்படி நல்ல கலாச்சாரத்தை கற்றுத் தர முடியும் என்றும், இந்தியாவை 200 ஆண்டாக அடிமைப்படுத்தி இருந்து அமெரிக்கா என்றும் கூறி தீரத் சர்ச்சையில் மாட்டிக் கொண்டார்.

கொரோனா உறுதி
இதற்கிடையே, முதல்வர் தீரத் சிங் ராவத்துக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களில் தன்னை சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்வது உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றுமாறும் அவர் தனது டிவிட்டரில் அறிவுறுத்தி உள்ளார்.

Tags : Uttarakhand ,Chief Minister , Uttarakhand, Chief Minister, 20 children, ration available
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்