×

மழை நீர் சேகரிப்பு பிரசாரம் தொடங்கி வைத்தார் மோடி

புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி மழை நீர் சேகரிப்பு குறித்த பிரசாரத்தை நேற்று தொடங்கி வைத்தார். உலக தண்ணீர் தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி டெல்லியில் ‘‘மழை நீர் சேகரிப்பு” பிரசாரத்தை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நாட்டில் பெரும்பான்மை மழைநீர் வீணாவது கவலைத்தரக்கூடிய விஷயமாகும். எவ்வளவு அதிகமாக மழைநீர் பாதுகாக்கப்படுகின்றதோ, அதனை பொறுத்து நிலத்தடி நீர் மட்டம் உயரும். பருவமழை காலம் வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் நிதியானது மழைநீரை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். இந்தியாவின் தன்னிறைவு என்பது அதன் நீர் ஆதாரங்கள் மற்றும் நதிகள் இணைப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றது. செயல்திறன் மிகுந்த நீர் பாதுகாப்பு இல்லாமல் துரிதமான வளர்ச்சி என்பது சாத்தியமில்லை.
பொதுமக்கள் தண்ணீரை நியாயமான முறையில் பயன்படுத்த வேண்டும்.

பருவமழைக்கு முந்தைய மற்றும் பருவ மழை காலத்தில் மார்ச் 22ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை மழைநீரை சேகரிப்போம் பிரசாரம் ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் செயல்படுத்தப்படும். பொதுமக்களின் பங்களிப்போடு அடிமட்ட அளவில் இருந்து நீர் பாதுகாப்பு பிரசாரம் செயல்படுத்தப்படும். மழைநீர் முழுமையாக சேகரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக பருவநிலை மாற்றங்கள், மண் அடுக்குகளுக்கு ஏற்றவாறு மழைநீர் சேகரிப்பு அமைப்புக்களை உருவாக்குவதற்கு அனைவரையும் வலியுறுத்துவது ஆகும்” என்றார். இந்நிகழ்ச்சியில் தேசிய நதிநீர் இணைப்பு திட்டத்தின் கீழ் உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களில் பாயும் கென்-பெட்வா நதிகளை இணைக்கும் திட்டத்தை அமல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் இரு மாநில முதல்வர்களும் நேற்று கையெழுத்திட்டனர்.

Tags : Modi , Rainwater harvesting, propaganda, Modi
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...