பெங்களூரு தமிழ்சங்க நிர்வாகிகள் தேர்தல்: 28ம் தேதி வாக்குப்பதிவுக்கு அடையாள அட்டை அவசியம்

பெங்களூரு: பெங்களூரு தமிழ்ச்சங்க நிர்வாகிகள் தேர்தலில் 50 பேர் களத்தில் உள்ளனர். வருகிற 28ம்தேதி காலை 9 மணி முதல் பகல் 4 மணிவரை  திருவள்ளுவர் சிலை அருகேயுள்ள ஆர்பிஎன்எஸ் கல்லூரியில் வாக்குகளை பதிவு செய்யவேண்டும் என்று தேர்தல் அதிகாரி சதாசிவா கேட்டுக்கொண்டுள்ளார். பெங்களூரு தமிழ்ச்சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு கோ.தாமோதரன், தாஸ், தரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். கோ.தாமோதரன் தலைமையிலான அணியில் செயலாளராக ராமசுப்பிரமணியன், துணை தலைவராக ராஜன், பொருளாளராக மணிகண்டன்( டீமணி), துணை செயலாளர்களாக சுரேஷ்குமார், பழனிச்சாமி, வெள்ளத்துரை மற்றும் பேரா.கோவிந்தராசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்பிற்கு சண்முகம், சிவராமன், மணி, விஜயலட்சுமி, ராஜ்குமார், கிருஷ்ணவேணி, கருப்பசாமி,  டாக்டர் எஸ் ஞானகுரு, குகவேஸ்வரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இது போல் தாஸ் மற்றும் ஸ்ரீதரன் அணியில் துணை தலைவர், செயலர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என போட்டியிட்டுள்ளனர்.  பெங்களூரு தமிழ்ச்சங்க தேர்தலில் மொத்தம் 51 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர்.

பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் போட்டியிடும் உறுப்பினர்கள் மூன்று வருடம் முன்பு தங்களை உறுப்பினராக பதிவுசெய்து கொண்டிருக்கவேண்டும். செயற்குழு உறுப்பினருக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்த ராஜசேகரன் தமிழ்ச்சங்கத்தில் உறுப்பினராகி மூன்று வருடம் முழுமை அடையவில்லை என்பதால் தேர்தல் அதிகாரி சதாசிவா வேட்புமனுவை தள்ளுபடி செய்தார். இது தொடர்பாக தேர்தல் அதிகாரி சதாசிவா கூறுகையில், பெங்களூரு தமிழ்ச்சங்க தேர்தலில் 51 பேர் வேட்புமனுதாக்கல் செய்திருந்தனர். இதில் ஒருவர் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் 50 பேர் களத்தில் உள்ளனர். வேட்பாளர்கள் அனைவருக்கும் விதிகளின்படி சின்னங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டன. வருகிற 28ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் பகல் 4 மணிவரை வாக்கு அளிப்பதற்கு தகுதியுள்ள உறுப்பினர்கள் பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட அடையாள அட்டையுடன் வாக்கு அளிக்கலாம். அல்சூரு திருவள்ளுவர் சிலை அருகேயுள்ள ஆர்பிஎன்எஸ் கல்லூரியில் வாக்கு பதிவு நடைபெறுகிறது. அன்றே வாக்கு எண்ணிக்கை நடைபெறும், என்றார்.

Related Stories:

>