×

பெங்களூருவுக்கு மாற்று நகரமாக தங்கவயல் துணை நகரம் திட்டம் செயல்படுத்தப்படுமா? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்

தங்கவயல்: தங்கவயலை துணை நகரமாக்கும் கர்நாடக மாநில அரசின் கனவு திட்டம் நிறைவேறுமா அல்லது கனவாகவே போகுமா என்று தங்கவயல் மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.  இந்திய வரலாற்றில் தங்கவயல் நகருக்கு தனி இடம் உண்டு. சுதந்திரம் பெற்ற பின்னர் இந்தியாவுக்கு கடன் கொடுக்க ஐநா சபை பிணை காப்பீடு கேட்ட போது அப்போதைய பிரதமர் நேரு தங்கவயலில் ஆங்கிலேயர்களால் தொடங்கி நடத்திவரப்பட்ட தங்கச்சுரங்கத்தை காட்டி கடன் வாங்கிய வரலாறும் உள்ளது. ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட தங்கச்சுரங்கத்தால் தங்கவயலில் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டது. அதில், அவர் குடிநீர், மேம்பட்ட சுகாதாரத்திற்காக ஆரம்ப சுகாதாரநிலையங்கள், மருத்துவமனை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 24 மணிநேரமும் அன்றாடம் பயன்படுத்த சுரங்க தண்ணீர், மாதத்திற்கு இரண்டு முறை ரேஷன் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறிய போது தங்கச்சுரங்கம் மத்திய அரசின் கீழ் வந்தது.

காலப்பபோக்கில் தங்கம் கிடைக்கவில்லை என காரணம் கூறி தங்கச்சுரங்கத்தை அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜ அரசு கடந்த 2001 மார்ச் 31ம் தேதி மூடியது. அன்று முதல் அனைத்து சலுகைகளையும் அனுபவித்து வந்த தங்கவயல் மக்கள் ஒவ்வொன்றாக இழந்தனர். குடியிருப்பு பகுதியில் சுத்தப்படுத்தும் அறவே நின்று போனது. தற்போது நகரசபை சார்பில் சுத்தப்படுத்தும் பணிகள் செய்து கொடுக்கப்பட்டாலும் முழுமையாக நடைப்பெறவில்லை. குடியிருப்பு பகுதியில் குப்பைகள், கழிவறைகள் சுத்தப்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், தங்கவயல் நகரத்தில் காலியாக உள்ள சுரங்க நிலத்தில் பெங்களூருவுக்கு மாற்று நகரமாக தங்கவயலில் ₹2400 கோடியில் துணை நகரம் உருவாக்கப்படும் என காங்கிரஸ் அரசில் நகரவளர்ச்சி துறை அமைச்சராக இருந்த ரோஷன்பெய்க் அறிவித்தார். கடந்த 2016ம் ஆண்டு தங்கவயலுக்கு நேரில் வந்து ஆய்வு நடத்திய பின்னர் தங்கவயலில் துணை நகரம் அமைப்பது எனது கனவு திட்டம் என அறிவித்தார்.

இதனால், தங்கவயல் மக்கள் மனதில் நம்பிக்கை துளிர்விட்டது. அழிவில் இருக்கும் தங்கவயல் துணை நகரம் உருவாக்கினால் மேலும் வளர்ச்சி அடையும் சர்வதேச அளவில் பெயர் இருக்கும், வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என எதிர்ப்பார்த்து காத்திருந்தனர்.  கடந்த 2018ல் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது. அந்த ஆட்சியில் தங்கவயலில் துணை நகரம் அமைக்கும் திட்டத்திற்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. ஓராண்டு காலத்தில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து கடந்த 2019 ஜூலை 26ம் தேதி பி.எஸ்.எடியூரப்பா தலைமையில் பாஜ ஆட்சி அமைந்தது. இந்த ஆட்சி அமைந்து 20 மாதங்கள் முடியும் நிலையில் துணைநகரம் அமைப்பது தொடர்பான திட்டம் செயல்படுத்துவது குறித்து யோசிக்கவில்லை. இதனால் கடந்த 5 ஆண்டுகள் கடந்தும் செயல்படுத்தவில்லை. துணைநகரம் என்ற தங்கவயல் மக்களின் கனவு நிறைவேறுமா அல்லது கனவாகவே கலைந்திடுமா என தங்கவயல் மக்கள் எதிர்ப்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். இதற்கு காலம் தான் பதில் சொல்லும். 


Tags : Goldfields ,Bangalore , ill the Goldfields sub-city project be implemented as an alternative city to Bangalore? The public in anticipation
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...