×

பிரசாரத்துக்கு போகாத சிட்டிங் எம்எல்ஏ: ‘யாரும் கூப்பிடலங்க... அதான் போகல’

மாங்கனி மாவட்டத்தில் சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு இலை கட்சி மீண்டும் சீட்டு வழங்காததற்கு தொகுதி மக்களின் அதிருப்திதான் காரணமாம். ஆனால், இதை உணராமல் சில எம்எல்ஏக்கள் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக கங்கணம் கட்டிக்கொண்டு நிக்கிறாங்களாம். இதில் கெங்கவல்லி தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக இருப்பவர் மருதமுத்து. கடந்த 5 ஆண்டுகளாக தொகுதி பக்கமே தலையை காட்டலையாம். அரசு விழாக்களில் மட்டுமே அண்ணனை பார்க்க முடியும். இதனால் மக்கள் கடும் அதிருப்தியில் இருக்காங்க என்று உளவுத்துறை கூறியதால் இம்முறை அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இது ஒருபுறமிருக்க, சமீபத்தில் நடந்த வேட்புமனு பரிசீலனையின் போது அந்த கட்சி  வேட்பாளர் நல்லதம்பியின் மனு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டதாம். 2015ம் ஆண்டு அவர் மீது நில அபகரிப்பு புகார் இருப்பதை மனுவில் அவர் மறைத்துவிட்டதே இதற்கு காரணமாம். ஆனால், இந்த வழக்கு ஆவணத்தை கொடுத்து உள்ளடி வேலை செய்ததே சிட்டிங் எம்எல்ஏ தான் என்ற சேதி, இப்போது தொகுதி முழுசும் கிளம்பியிருக்காம்.

இதனால் கடும் அப்செட்டான கட்சி தலைமை, அவரை பிரசாரத்திற்கு எங்கேயும் கூட்டிட்டு போகாதீங்க என்று கறார் உத்தரவு போட்டிருக்காம். இதனால் பரபரப்பான தேர்தல் பிரசார களத்தில் சிட்டிங் எம்எல்ஏவை எங்கும் பார்க்க முடியலியாம். இதுகுறித்து எம்எல்ஏவிடம் கேட்டால் ‘‘என்னை பிரசாரத்திற்கு வரவேண்டாம்னு யாரும் சொல்லலங்க. அதே நேரம் யாரும் என்னை கூப்புடவும் இல்ல. அதனாலதான் நானும் பிரசாரத்துக்கு போகல,’’ என்கிறார். அப்படி போடுங்கய்யா அரிவாளை என்கின்றனர் அடிப்பொடிகள்.

இப்படியுமா சென்டிமென்ட் பார்ப்பாங்க...கார் காரணமா? கடை காரணமா...?

சிவகங்கை மாவட்டத்தின், மானாமதுரை தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏ நாகராஜன். 2016 தேர்தலில் இங்கு வெற்றி பெற்ற மாரியப்பன் கென்னடி, டிடிவி அணிக்கு தாவியதால் பதவி இழந்ததையடுத்து நடந்த இடைத்தேர்தலில் நாகராஜனுக்கு சீட் கிடைத்தது. சீட் கிடைத்ததும் மானாமதுரை காட்டுஉடைகுளம் அருகே தேமுதிக பிரமுகருக்கு சொந்தமான பர்னிச்சர் கடையை வாடகைக்கு பிடித்து தேர்தல் அலுவலகம் துவக்கினார். இடைத்தேர்தல் என்பதால் ஆளும்கட்சியினர் ஆட்சியை தக்கவைக்க தொகுதி முழுவதும் சூறாவளியாய் சுழன்று வெற்றி பெற வைத்தனர்.

ஆனால், கட்சியினரின் உழைப்பை நம்பாமல், நான் பிடித்த தேர்தல் அலுவலகத்தின் ராசி தான் வெற்றிக்குக் காரணம் என தனக்கு நெருங்கியவர்களிடம் சொல்லி வந்த எம்எல்ஏ, இந்த முறை சீட் கிடைத்ததும் அதே கடையை தேர்தல் அலுவலகமாக நடத்த மீண்டும் வாடகைக்கு எடுத்து விட்டாராம். கடந்த முறை சீட் கிடைத்தது முதல் தற்போது நடப்பது எல்லாத்திற்கும் சென்டிமென்ட் தான் காரணம் என கூறிவருவதை பார்த்து உள்ளூர் நிர்வாகிகள் கிண்டலாய் சிரிக்கின்றனர்.

அதிமுக தொண்டர்கள் கூறுகையில், ‘‘முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் 2006ல் சீட் கிடைத்த போது ‘‘1400’’ என்ற பதிவுஎண் கொண்ட டாடா சுமோ கார் வைத்திருந்தார். பின்னர், மீண்டும் இரண்டாவது முறையாக அவர் வெற்றி பெற்றபோதும், அதே கார் அவரிடம் இருந்தது. மூன்றாவது முறை சீட் கிடைக்கும் என்று அதே காரில் சென்னைக்கு சென்றார். ஆனால், சீட் கிடைக்கவில்லை. மாரியப்பன் கென்னடிக்கு கிடைத்தது. நான்காவது முறையாவது சீட் கிடைக்கும் என்று சுற்றியபோது நாகராஜனுக்கு  கிடைத்தது. ஐந்தாவது முறையாக பழைய காரிலேயே இப்போதும் சுற்றி வந்தார். இந்த முறையும் சீட் கிடைக்கவில்லை.

இவரைபோலத்தான் மாரியப்பன் கென்னடி சீட் கிடைத்ததும் தனது நண்பரின் காரை பிரசாரத்திற்கு பயன்படுத்தினார். தேர்தலில் வெற்றிக்கு கார்தான் காரணம் என்று நம்பினார். மீண்டும் இடைத்தேர்தலில் அதே காரில் சென்றும் மூன்றாவது இடம் தான் கிடைத்தது. மக்களுக்கு நல்லது செய்தாலே நாகராஜன் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களிப்பார்கள். ஆனால், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் கட்டிடத்தின் மீது நம்பிக்கை வைத்தால் எப்படி தேறுவார்  என்கிறார்கள் தொகுதி மக்கள்.

Tags : MLA , ADMK
× RELATED பல்லடம் வாக்குச்சாவடியில் திமுக எம்எல்ஏ தர்ணா