தொண்டாமுத்தூர் தொகுதியில் நிச்சயம் போட்டியிடுவேன்: நடிகர் மன்சூர் அலிகான் திடீர் பல்டி

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட கடந்த 18-ம் தேதி நடிகர் மன்சூர் அலிகான் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், நேற்று முன்தினம் தேர்தலில் இருந்து விலகுவதாக தெரிவித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தநிலையில் நேற்று, கோவை வந்த மன்சூர் அலிகான் பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றார். அவருக்கு, அவர் கேட்ட அதே சின்னமான தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதுபற்றி, மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘சின்னம் வாங்குவதற்காக வந்தேன். நிச்சயமாக தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடுவேன். இங்கு எனக்கு வாடகைக்கு வீடு கிடைக்காத அளவுக்கு நெருக்கடிகள் கொடுக்கின்றனர். பிரசார வாகன அனுமதிக்கு இழுத்தடிக்கின்றனர். விரைவாக அனுமதி வழங்க வேண்டும். தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளேன்’’ என்று தெரிவித்தார்.

பேட்டியின்போது, தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று சொன்னீர்கள். இப்போது போட்டியிடுவேன் என சொல்கிறீர்களே என்று கேட்டபோது, ‘‘அது நேத்து சொன்னது. இது, இன்றைக்கு சொன்னது. தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன்’’ என பதில் அளித்தார். நேற்று முன்தினம் ஆடியோவில், போட்டியிடவில்லை என்று கூறிய மன்சூர் அலிகான் நேற்று திடீரென பல்டி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: