×

தஞ்சையில் கமல் பிரசார வாகனத்தில் பறக்கும்படை சோதனை

தஞ்சை: நாகை மாவட்டம் கீழ்வேளூர், நாகை ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் ம.நீ.ம. வேட்பாளர்களை ஆதரித்து நாகை அபிராமி அம்மன்சன்னதி திடலில்  தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். பின்னர்,  நாகப்பட்டினத்திலிருந்து தஞ்சாவூர் வந்த கமல்ஹாசன், மாலையில் தஞ்சாவூர் ரயிலடியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் காரில் திருச்சி நோக்கி புறப்பட்டார். அப்போது தஞ்சாவூர் பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே கமல்ஹாசன் சென்ற பிரசார வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் மறித்தனர்.

இதையடுத்து துணை ராணுவ படையினர், போலீசார் வாகனத்துக்குள் ஏறி சோதனை செய்தனர். பணம் உள்ளிட்ட பொருட்கள் எதுவும் கிடைக்காததால் கமல்ஹாசன் வாகனத்தை சிறிது நேரத்திற்கு பின்னர் அனுப்பி வைத்தனர். முன்னதாக, பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் ம.நீ.ம. வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பேசியதாவது: மக்கள் நீதி மய்யத்தை பொறுத்தவரை யாருக்கும் அரசியல் தொழில் கிடையாது.

இது ஒரு கடமை. சேவை பெறும் உரிமை என்ற சட்டம் நாங்கள் வந்தால் கொண்டு வரப்படும். சேவை பெறும் உரிமை உங்களுடையது. அதை வழங்கும் முதல் கட்சி மக்கள் நீதி மய்யம். தைரியமாக ஊழல் செய்பவர்களை நீக்குவதற்கும், தண்டிப்பதற்குமான எல்லா ஏற்பாடுகளையும் அதாவது நட்டு போல்டு எல்லாம் டைட் பண்ண போறோம். இவ்வாறு அவர் பேசினார்.



Tags : Kamal ,Thanjavur , Tanjore, Kamal, Flying Squadron, Test
× RELATED கமலுடன் மீண்டும் இணைந்த லோகேஷ் கனகராஜ்