வேறு சமூக வாலிபரை மணந்ததால் ஆத்திரம்: ஹரிஜன் பஸ்தி காலனியில் கும்பல் சரமாரி தாக்குதல்

* பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிப்பு

* வீடுகள் சேதம், குடியிருப்புவாசிகள் பலர் காயம்

* பெண்ணின் சகோதரர் உட்பட நால்வர் கைது

புதுடெல்லி:தென்கிழக்கு டெல்லியின் ஹரிஜன் பஸ்தி பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவர் மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார். அவர்களது காதலுக்கு பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால், காதலர்கள் இருவரும் கடந்த மார்ச் 16ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், பெண்ணின் சகோதரர் கடந்த சனிக்கிழமையன்று சன்லைட் காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது சகோதரியை காணவில்லை என்றும், வாலிபர் கடத்தி சென்று விட்டார் என்றும் புகாரில் தெரிவித்து இருந்தார். இதையடுத்து, வாலிபரின் பெற்றோரை போலீசார் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைத்துச் சென்றனர். இதற்கிடையில், பெண்ணின் சகோதரர் மற்றும் அவருடன் வந்த 15க்கும் மேற்பட்ட கும்பல் ஹரிஜன்பஸ்தி காலனிக்குள் புகுந்து வாலிபரின் வீட்டில் பெண்ணை தேடினர். அவர்கள் அங்கு இல்லாததால் ஆத்திரமடைந்த கும்பல், அந்த வீட்டை அடித்து உடைத்து, அருகில் இருந்த பூந்தொட்டிகள், வீட்டின் கதவுகள், வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திவிட்டு சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா காடசிகளை ஆய்வு செய்தனர். அதில் , 15க்கும் மேற்பட்ட கும்பல் புகுந்த தாக்குதல் நடத்தியது பதிவாகி இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளத்திலும் பகிரப்பட்டு இருந்தது. இதையடுத்து, போலீசார், பெண்ணின் சகோதரன் உட்பட நால்வரை கைது செய்தனர். இதுகுறித்து துணை கமிஷனர் ஆர் பி மீனா கூறியதாவது:   ஹரிஜன் பஸ்தி காலனி தாக்குதல் குறித்து விசாரணை நடத்தியதில் காதல் விவகாரம் தெரியவந்தது. இதுபற்றி ஏற்கனவே காவல் நிலையத்தில் பெண்ணின் சகோதரர் புகார் அளித்து இருந்தார். இதையடுத்து இருதரப்பினரையும் போலீசார் அழைத்து பேசி சமானதானம் பேசினர். பின்னர் பெண்ணின் விருப்பத்தையும் கேட்டு அறிந்தனர்.

அப்போது, வாலிபரை திருமணம் செய்து கொள்வதில் பெண் உறுதியாக இருந்தார். இதனால் அவர்களை அங்கிருந்து செல்ல போலீசார் அனுமதித்தனர். அன்றைய தினத்தில் தான் பெண்ணின் சகோதரர் தனது சகோதரியை தேடி வாலிபரின் வீடு உள்ள ஹரிஷன் பஸ்திக்குள் கும்பலாக நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், அங்குள்ள மற்ற குடியிருப்பாளர்கள் சிலர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, பெண்ணின் சகோதரர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தாக்குதல் நடந்த சமயத்தில் காதலர்கள் மற்றும் வாலிபரின் பெற்றோர் யாரும் வீட்டில் இல்லை. அங்கு பெண்ணின் வீட்டார் மிரட்டிச்சென்றுள்ளதால் குடியிருப்புவாசிகள் அச்சம் தெரிவித்தனர். இதனால் பாதுகாப்பு கருதி போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.

Related Stories:

More
>