×

குடோனில் திடீர் தீ விபத்து: ரூ.3 கோடி மதிப்பிலான முந்திரி கொட்டை சாம்பல்

பண்ருட்டி: பண்ருட்டி அருகே முந்திரி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் ரூ.3 கோடி மதிப்பிலான முந்திரி கொட்டைகள் எரிந்து சேதம் அடைந்தது. தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காங்கிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (55). இவருக்கு சொந்தமான முந்திரி ஆலை கும்பகோணம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாவைகுளம் கிராமத்தில் உள்ளது. இந்த ஆலையின் உள் பகுதியில் சுமார் 3,500 முந்திரிக்கொட்டை மூட்டைகள் உடைப்பதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இந்த மூட்டைகள் நேற்று மாலை திடீரென்று தீப்பற்றி எரிந்தது.

இதனால் அப்பகுதியே பெரும் புகைமூட்டமாக மாறியது. முத்தாண்டிக்குப்பம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முந்திரிக் கொட்டையில் இருந்து வந்த கரும்புகை மற்றும் நெடியால் தீயை அணைக்க முடியாமல் போராடினார்கள். இதனால் பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடியில் இருந்து தீயணைப்புத் துறை அலுவலர் லோகநாதன் தலைமையில் தீயணைப்பு வாகனம் மற்றும் சுமார் 30 தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ. 3 கோடி மதிப்பிலான முந்திரி கொட்டைகள் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. விசாரணையில் ஆலையில் ஏற்பட்ட மின்கசிவு தான் இந்த தீ விபத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.


Tags : Gudon , Sudden fire in Gudon: Cashew nut ash worth Rs 3 crore
× RELATED 24,000 வேட்டி சேலைகள் பதுக்கல் அதிமுக...