பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கின் ஆரம்பம்: கை தட்டி, மணியோசை எழுப்பி இன்றுடன் ஓராண்டாச்சு..!இன்னும் கொரோனா அச்சம் முடிவுக்கு வராததால் கவலை

புதுடெல்லி: பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கின் ஆரம்ப நாளான இன்றுடன் கை தட்டி, மணியோசை எழுப்பி ஓராண்டான நிலையில், கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கொரோனா  வைரஸ் தொற்று பரவல் உலகெங்கும் அச்சுறுத்தி வந்த நிலையில், இந்தியாவில் பிரதமர் மோடி கடந்த 2020 மார்ச் 19ம் தேதி தொலைகாட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ‘உலகம் முழுவதும் கோவிட்-19 நோய் பெரும்  பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே, 22ம் தேதி காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த ஊரடங்கு உத்தரவுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அத்தியாவசியத் தேவைகளைத் தவிர மற்ற எதற்கும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். நாள்தோறும் ஒருவர் குறைந்தபட்சம் 10 பேருக்காவது கொரோனா வைரஸ்  குறித்தும், ஜனதா ஊரடங்கு குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முதலாம் உலகப் போர், 2ம் உலகப்போரில் நாடுகள் பாதிப்பு அடைந்ததை விட இந்த கொரோனா வைரசால் அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே வரும் 22ம் தேதி நாம் அனைவரும் மாலை 5 மணிக்கு வீட்டின் முற்றத்தில், பால்கனியில் நின்று கொண்டு கை தட்டி, 5 நிமிடம் மணியோசை எழுப்பி மருத்துவர்களுக்கும் பணியாளர்களுக்கும் மரியாதை செலுத்துவோம்’ என்று  பேசினார்.  பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதற்கு இணங்க, மார்ச் 22ம் தேதி மக்களும் கை தட்டி, மணியோசை எழுப்பினர். ஆனால், அதனை தொடர்ந்து மார்ச் 25ம் ேததி முதல் நாடு முழுவதும் 23 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  பொதுமக்கள் பொது இடங்களில் கூட தடை விதிக்கப்பட்டது. தொழில், வர்த்தகம், அலுவல் என்று அனைத்து செயல்பாடுகளும் முடக்கிவைக்கப்பட்டன.

பின்னர் இரண்டாவது முறையாக ஏப்ரல் 15 முதல் மே 3 வரையும், மூன்றாவது முறையாக மே 4 முதல் 17 வரையும், இறுதியாக மே 18 முதல் 31ம் தேதி வரையும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது. பின்னர் ஜூன் 1ம் தேதி முதல்  கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. கடந்த மாதம் வரை, தளர்த்தப்பட்ட ஊரடங்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வந்தாலும் கூட, இன்னும் பள்ளிகள் கூட திறக்கப்படவில்லை. இதற்கிடையே ஓரளவு மக்கள்  இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில், கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. தடுப்பூசி கண்டறியப்பட்டு 4 கோடி பேருக்கு மேலாக போட்டும், பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை.  தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட 9 மாநிலங்களில் தொற்று பரவல் வேகமெடுத்து வருகிறது.

இன்றைய நிலவரப்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,009 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 11,149,324 பேர் குணமாகி உள்ளனர். நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 213 பேர் பலியாகி உள்ளனர். மொத்தம் 11,645,719 பேர்  இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 160,003 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். அதேசமயம், கொரோனா பாதித்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,11,30,288 ஆக (95.96%)  பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>