அயோத்தியில் ராமர் கோயில் கட்ட இதுவரை ரூ.3000 கோடி நன்கொடை வசூல்

உ.பி: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நன்கொடையாக இதுவரை ரூ.3000 கோடி வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.557 கோடி வழங்கி ராஜஸ்தான் முதல் மாநிலமாக திகழ்கிறது. இக்கோயிலுக்கு தமிழகத்திலிருந்து ரூ.85 கோடி வசூலாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

உத்தரப்பிரதேசம் அயோத்தியில் ராமர் கோயிலுக்காக நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்களில் நிதி வசூலாகி வருகிறது. இதன்மூலம், ராமர் கோயிலை கட்டும் பணிக்காக ராம்ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு ரூ.3000 கோடிக்கும் அதிகமாக நிதி சேர்ந்துள்ளது. இப்பணிக்காக நாடு முழுவதிலும் இருந்து பாஜக, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் உள்ளிட்ட சுமார் 9 லட்சம் ராம பக்தர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இவர்கள் நாட்டின் நான்கு லட்சத்திற்கும் அதிகமான கிராமங்களுக்கும் நேரில் சென்று கோயிலுக்கான நிதி திரட்டினர். இவற்றில் ரூ.557 கோடி கொடுத்து நாட்டில் அதிக நிதி அளித்த மாநிலத்தினராக ராஜஸ்தான் மக்கள் உள்ளனர். ஜம்மு-காஷ்மீர் ரூ.14 கோடி, கேரளா ரூ.13 கோடி, அருணாச்சலப் பிரதேசம் ரூ.45 கோடி, மணிபூர் ரூ.2 கோடியும் அளித்துள்ளன. மிசோராமில் ரூ.21 லட்சம், நாகாலாந்து ரூ.28 லட்சம், மேகாலாயா ரூ.85 லட்சம் என வசூலாகியுள்ளது.

வங்கிகளில் செலுத்தப்பட்ட சுமார் 80,000 காசோலைகள் இன்னும் அறக்கட்டளையின் கணக்கில் சேரவில்லை. இதன் மதிப்பு ரூ.100 கோடி ஆகும். வசூலானவற்றில் சுமார் 2,000 காசோலைகளில் அதன் வங்கிக்கணக்குகளில் பணம் இல்லை எனத் திரும்பியுள்ளன. மேலும் சுமார் 6,000 காசோலைகள் எழுத்துப்பிழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் செலுத்த முடியாமல் உள்ளன.

Related Stories:

>