×

கொள்ளிடம், சீர்காழி பகுதி நேரடி கொள்முதல் நிலையங்களில் 8 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்-குடோனுக்கு எடுத்து செல்ல விவசாயிகள் கோரிக்கை

*குரலற்றவர்களின்  குரல்

கொள்ளிடம் : கொள்ளிடம், சீர்காழி பகுதி நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 8 லட்சம் நெல் மூட்டைகள் போதிய பாதுகாப்பின்றி அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதை உடனடியாக குடோன்களுக்கு எடுத்து செல்ல வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொள்ளிடம் மற்றும் சீர்காழி ஒன்றியங்களை சேர்ந்த 80 ஊராட்சிகளில் 46 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் இயங்கி வரும் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கடந்த 2 மாதமாக விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது. அப்போது 3 அல்லது 4 நாட்களுக்கு ஒருமுறை லாரிகள் மூலம் கொள்ளிடம் அருகே உள்ள எருக்கூர் நவீன அரிசி ஆலை குடோனுக்கு நெல் மூட்டைகள் எடுத்து செல்லப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 10 நாட்களாக கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை குடோன்களுக்கு எடுத்து செல்லவில்லை. இதனால் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் போதிய பாதுகாப்பின்றி நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் வெயிலில் காய்ந்து நெல்கள் சேதமடைகிறது. மேலும் மழை பெய்தால் நெல் முளைத்து பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 13 ஆயிரம் முதல் 17 ஆயிரம் வரையிலான நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்வது நேற்றுடன் நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால் கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் எடுத்து செல்லப்படாமல் உள்ளது. இதை சுமைதூக்கும் தொழிலாளர்கள் தொடர்ந்து பாதுகாத்து வருகின்றனர். அதிகாரிகளின் மெத்தனத்தால் நெல் மூட்டைகள் போதிய பாதுகாப்பின்றி அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது கொள்ளிடம், சீர்காழி பகுதியில் மட்டும் சுமார் 8 லட்சம் நெல் மூட்டைகள் போதிய பாதுகாப்பின்றி அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே காலம் கடந்து நெல் மூட்டைகளை எடுத்து செல்லாமல் இருக்கும் நிலையை மாற்றி உடனடியாக பாதுகாப்பாக எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kollidam, Sirkazhi , Kollidam: 8 lakh bundles of paddy procured from Kollidam, Sirkazhi area direct purchase centers are sufficient.
× RELATED கொள்ளிடம், சீர்காழி பகுதியில் 3 மாதத்தில் ₹169.97 கோடிக்கு நெல் கொள்முதல்