ஜோலார்பேட்டை அருகே ஓராண்டாக இருளில் மூழ்கிய மேம்பாலம்-மின் விளக்குகளை சீரமைக்க கோரிக்கை

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே ஓராண்டுக்கும் மேலாக மின் விளக்கு எரியாமல் இருளில் மூழ்கியுள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரி முத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு ₹21 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலப் பணி முடிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இந்த ரயில்வே மேம்பாலம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சாலை வழியாக நாட்றம்பள்ளி, கொத்தூர், ஆந்திர மாநிலம் குப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் மேம்பால பணி பயன்பாட்டிற்கு வந்தபோது, மேம்பாலத்தில் மின் கம்ப மின்விளக்குகள் அமைக்கப்பட்டு அப்பகுதியில் வெளிச்சமாக இருந்தது. ஆனால் ஒருசில ஆண்டுகளிலேயே மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் பழுதடைந்து தற்போது இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர்கள் அடிக்கடி விபத்து ஏற்பட்டு அவதிக்குள்ளாகின்றனர். மேலும், பகலிலேயே நடந்து செல்பவர்களுடம், பணம், செல்போன் மற்றும் நகை போன்றவற்றை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு தப்பிச் செல்கின்றனர். இதில் இரவில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்லும் போதும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட  நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து கிடக்கும் மேம்பால சாலையில் எரியாமல் உள்ள மின்விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>