புன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3 மாதங்களாக குவிந்துள்ள கட்டிட கழிவுகளால் நோயாளிகள் அவதி-அதிகாரிகள் அலட்சியம் என குற்றச்சாட்டு

நெமிலி : நெமிலி அடுத்த புன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இடித்து மூன்று மாதங்களாகியும் அகற்றப்படாத கட்டிட கழிவுகளால் நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர்.நெமிலி அடுத்த புன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவருக்கான குடியிருப்பு  மிகவும் பழமையான கட்டிடம். எப்போது இடிந்து விழும் என்று தெரியாமல் இருந்த நிலையில் அதிகாரிகள் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டு நாளிதழில் செய்தி வெளியிடப்பட்ட பின்னர்  இடிக்கப்பட்டது.  

இடிக்கப்பட்ட கட்டிட கழிவுகள் மூன்று மாதங்களுக்கு மேலாகியும் அதிகாரிகள் அப்புறப்படுத்தாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் கட்டிட இடிபாடுகளுக்குள் பாம்பு, பூரான் போன்ற  விஷ ஜந்துக்கள் புகுந்து பின்னர் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு தொந்தரவு அளித்து வருகிறது.

மேலும் புறநோயாளிகள் மருத்துவமனைக்குள் வருவதற்கு மிகவும் அச்சமடைந்துள்ளனர். தற்போது கோடைகாலம் என்பதாலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் அரசு ஊழியர்கள் இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். எனவே சம்பந்தபட்ட  மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories:

>