தர்மபுரி மாவட்டத்தில் வறட்சியால் உணவின்றி தவிக்கும் குரங்குகள்

அரூர் : தர்மபுரி மாவட்ட வனப்பகுதியில் கடும் வறட்சி தலை தூக்கியுள்ளதால் குரங்குகள் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம், மலை குன்றுகள் நிறைந்த பகுதியாகும். இங்கு, குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் ஏராளமாக வசித்து வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் வறண்டு போய் காணப்படுகிறது. மேலும், இலை தழைகள் காய்ந்து சருகாகி வருவதால் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தண்ணீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் ஊருக்குள் படையெடுப்பது அதிகரித்துள்ளது. குறிப்பாக குரங்குகள் கூட்டம் கூட்டமாக ஊருக்குள் வந்த வண்ணம் உள்ளன.

அரூரிலிருந்து தீர்த்தமலை வழியாக திருவண்ணாமலை செல்லும் சாலையில் உள்ள தெத்தேரி வனப்பகுதியில் அதிகளவில் குரங்குகள் உள்ளன. தற்போது, வனப்பகுதியில் கடும் வறட்சி தலை தூக்கியுள்ளதால் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், குரங்குகள் உணவு தேடி சாலையோரம் குவிந்து வருகின்றன. குரங்குகளை கண்டு அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் பழம் மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவற்றை உணவாக போட்டு விட்டு செல்கின்றனர்.

ஆனால், குரங்குகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் உணவு பற்றாக்குறை காணப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘வனப்பகுதியில் நிலவும் கடுமையான வறட்சியால் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், குரங்குகள் ஊருக்குள் படையெடுத்து வருகின்றன. ஒரே நேரத்தில் அதிகளவிலான குரங்குகள் வருவதால் உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. உணவுக்காக குரங்குகள் சண்டையிட்டுக்கொள்வதை பார்க்கும்போது பரிதாபமாக உள்ளது. எனவே, வனப்பகுதியில் போதிய அளவில் உணவு, தண்ணீர் கிடைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories:

>