கலசபாக்கம் தொகுதியில் வாக்கு சேகரிப்பு இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும்-திமுக வேட்பாளர் பெ.சு.தி. சரவணன் உறுதி

கலசபாக்கம் : கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பெ.சு.தி.சரவணன் நேற்று புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சி  உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.அப்போது, வேட்பாளர் பெ.சு.தி.சரவணன் பேசியதாவது:எனக்கு பொன், பொருள் வேண்டாம், தொகுதி மக்களின் புன்னகை மட்டும் போதும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களின் வளர்ச்சிக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன். நான் விவசாய குடும்பத்தில் பிறந்ததால் அவர்களது கஷ்டங்கள் எனக்கு நன்கு தெரியும்.

கலசபாக்கம் தொகுதியின் முதுகெலும்பாக விவசாயிகள் உள்ளனர். விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன். வாரத்திற்கு ஒருமுறை பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக சிப்காட் தொழிற்பேட்டை கொண்டு வரப்படும். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டனர்.

பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தவும், தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமெனில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றால் மட்டுமே முடியும். தற்போதைய ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் கொடிகட்டி பறக்கிறது. ஊழல் ஆட்சியை அகற்றிவிட்டு மக்கள் நலன் மீது அக்கறை உள்ள திமுக ஆட்சி மலர்ந்திட எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்.

கடந்த 20 ஆண்டு காலமாக கலசபாக்கம் தொகுதியில் எந்த விதமான வளர்ச்சி திட்டங்களும் செயல்படுத்தவில்லை. இதனால் தொகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 20 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாத திட்டங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனதும் கண்டிப்பாக கலசபாக்கம் தொகுதி மக்களின் முன்னேற்றத்திற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் இரவு, பகல் பாராமல் பாடுபடுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

திமுக வேட்பாளருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், திமுக தேர்தல் அறிக்கை குறித்த துண்டு பிரசுரம் வீடு, வீடாக வழங்கி வாக்கு சேகரித்தனர்.

Related Stories:

>