தா.பழூர் அருகே ஸ்ரீபுரந்தான் பகுதியில் அறுவடை முடிந்ததால் வயல்வெளியில் மேய்ச்சல் வாத்துகள்-வெளி மாவட்டத்திலிருந்து வந்து சேர்ந்த குடும்பத்தினர்

தா.பழூர் : ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் அறுவடை முடிந்த நிலையில் வாத்து மேய்க்கும் தொழிலாளிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குடும்பம் குடும்பமாக வந்து வாத்துகளை மேய்த்து வருகின்றனர்.அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே ஸ்ரீபுரந்தான் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் அறுவடை முடிந்த பிறகு பல்வேறு மாவட்டங்களில் இருந்து செம்மறி ஆடுகள், நாட்டு மாடுகள் என மேய்த்து வயலுக்கு இயற்கை உரமான ஆடு மற்றும் மாட்டின் சானங்களை உரமாக்கி விவசாயம் செய்யும்போது அதிக அளவில் மகசூல் கிடைக்கும் என ஆடு, மாடுகளை வயல்களில் பட்டி அடைக்க வயலின் உரிமையாளர்கள் ஒரு தொகையை கொடுத்து பட்டி அமைத்து இரவு நேரங்களில் வயலில் அடைத்து வைப்பது வழக்கம். இதனை தொடர்ந்து இந்த வரிசையில் இப்போது வாத்துகளும் வந்துள்ளது.

ஸ்ரீபுரந்தான் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் அறுவடை முடிந்த நிலையில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 10க்கும் மேற்பட்டடோர் குடும்பம் குடும்பமாக வாத்து மேய்ப்பதற்கு இப்பகுதியை நாடி வந்துள்ளனர்.

இது குறித்து வாத்து மேய்க்கும் தொழிலாளி கூறுகையில், கள்ளக்குறிச்சி பகுதியில் இருந்து வந்துள்ளோம். நினைவு தெரிந்த நாளில் இருந்து வாத்து மேய்த்து வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் இப்பகுதியில் அறுவடை முடிந்ததும் இங்கு வந்துவிடுவோம். ஏன் என்றால் இப்பகுதியில் மோட்டார் மூலம் நீர் இறைத்து மீண்டும் நடவு பணி துவங்கும்.

இதனால் வெயில் காலத்திலும் வாத்துகளுக்கு போதிய தண்ணீர் இருக்கும். தேவையான உணவும் கிடைக்கும். மேலும் இப்பகுதியில் வாத்துகளை விற்பனை செய்யலாம். ஸ்ரீபுரந்தான் பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் குடும்பமாக வந்து வாத்துகளை மேய்த்து வருகிறோம். வாத்துகளின் கழிவுகளை வயலுக்கு இயற்கை உரமாக விவசாயிகள் பயன்படுத்துவதால் இரவு நேரங்களில் கூண்டு போல் அமைத்து அதில் வாத்துகளை அடைத்து வைத்து கழிவுகளை உரமாக்கி வருகிறோம்.

இதற்கு வயலின் உரிமையாளர்கள் ஒரு தொகையை கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார். சுமார் 4 மாதத்திற்கு இப்பகுதியில் இருப்போம். அடுத்த கட்டமாக கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாத்து மேய்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

Related Stories:

More
>