×

ஞாயிறு லாக்டவுன்... இரவு நேர ஊரடங்கு.. கொரோனா பரவலை தடுக்க 8 மாநிலங்களில் தீவிர கட்டுப்பாடுகள் அமல்!

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் லாக்டவுன், இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன. அண்மை காலங்களில் உலக அளவில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் நோய்த் தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் கொரோனா தொற்று பதிவாகி வருகிறது.இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு விதிக்கலாமா என சில மாநில அரசுகள் பரிசீலித்து வருகின்றன. குறிப்பிட்ட சில நகரங்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, பகல் நேரக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவைகள் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளன.

*மகாராஷ்டிராவில் கொரோனா கால கட்டுப்பாடுகள் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. 10 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகள் உள்ளிட்டவை 50% இருக்கைகளுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. தனியார், அரசு அலுவலகங்களும் 50% ஊழியர்களுடன் மட்டும் இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

*பஞ்சாப் மாநிலத்தில் 11 மாவட்டங்களில் மார்ச் 31 வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

*குஜராத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் பொதுநிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஹோலி பண்டிகையின் போது ஒருவருக்கு ஒருவர் வண்ண பொடி பூசுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

*மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழுமையான லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழுமையான ஒருநாள் லாக்டவுன் கொரோனா பாதீப்பு அதிகம் உள்ள 3 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் காலை 11 மணி, இரவு 7 மணிக்கு சைரன் ஒலி எழுப்பப்படும். அப்போது முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றுக்கு பொதுமக்கள் உறுதி மொழி எடுத்துக் கொள்வர்.

*ராஜஸ்தான் மாநிலத்தில் 8 நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்துக்குள் நுழையும் பிற மாநிலத்தவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். மேலும் அவர்கள் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர். இன்று முதல் இரவு 10 மணிக்குப் பின்னர் அனைத்து சந்தைகளும் மூடப்பட்டிருக்கும். 5 பேருக்கு கொரோனா தொற்று இருந்தால் அந்த பகுதி நோய் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்படும்.

*கோவா மாநிலத்தில் ஹோட்டல்கள், பொழுது போக்கு நிகழ்வு இடங்களில் கொரோனா கால கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

*சத்தீஸ்கர் மாநிலத்தில் பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடிகள் ஞாயிறு முதல் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் தொடர்ந்து இயங்குமாம். பிற வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக சத்தீஸ்கர் அரசு அறிவித்துள்ளது.

*அந்தமான் தீவுகளுக்கு இடையே பயணம் மேற்கொள்வோர் கொரோனா இல்லை என்கிற சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். சுற்றுலா பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது



Tags : Lockdown , Sunday Lockdown, Curfew, Corona
× RELATED கோயில் பூத்தட்டு திருவிழா