×

ரேசன் பொருட்கள் அதிகமாகக் கிடைக்க வேண்டும் என்றால் 20 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் : உத்தரகாண்ட் பாஜக முதல்வரின் பலே ஐடியா!!

டெஹ்ராடூன் : கொரோனா போன்ற இக்கட்டான காலகட்டத்தில் ரேசன் பொருட்கள் அதிகமாகக் கிடைக்க வேண்டும் என்றால் 20 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று உத்தரகாண்ட் முதல்வர் திராத் சிங் ராவத் கூறியது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. உத்தரகாண்டில் முதல்வர் திராத் சிங் ராவத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் புதிதாக பதவியேற்று இன்னும் ஒரு மாதம்கூட நிறைவடையாத நிலையில் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

அண்மையில் பெண்கள் அணியும் கிழிந்த ஜீன்ஸ் குறித்து இவர் பேசிய பேச்சு, சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. கிழிந்த ஜீன்ஸ்கள் போன்ற உடைகளை அணிந்து, அவர், மற்றவர்களுக்கு எப்படி முன்னுதாரணமாகத் திகழ முடியும்? என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதையடுத்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், 200 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த அமெரிக்காவால் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை; ஆனால் இந்தியாவால் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடிந்தது. அதற்குக் காரணம் பிரதமர் மோடி தான் என்று பேசினார்.

இந்நிலையில் அவரது பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரேசன் கடையில் அதிக பொருட்கள் கிடைக்க வேண்டும் என்றால் அதிக குழந்தைகளை ஒருவர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் பேசியுள்ளார். சமீபத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் திராத் சிங் ராவத், குடும்பத்தில் ஒருவருக்கு 5 கிலோ ரேசன் வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 10 பேர் இருந்தால் அவர்களுக்கு 50 கிலோ ரேசன் கிடைக்கும், 20 பேர் இருந்தால் 100 கிலோ ரேசன் கிடைக்கும். ஆனால் இரண்டு மூன்று குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட சிலர், தங்களுக்கு மட்டும் குறைவான அளவு ரேசன் கிடைப்பதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர். உங்களுக்கு இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள நேரம் இருக்கிறது என்றால், ஏன் நீங்கள் 20 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளக் கூடாது. இதன் மூலம் குடும்பத்தினருக்கு அதிகளவில் ரேசன் பொருட்கள் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்

Tags : Uttarakhand ,BJP , Ration Products, Uttarakhand, BJP Chief Minister
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்